நல்லிணக்கமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்
-நரேன்-
2015 ஆம் ஆண்டு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் இந்த நாட்டில் இருந்த மஹிந்தா ஆட்சி நீக்கப்பட்டு புதிய ஜனாதிபதியாக எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மைத்திரி தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் அதனை வலுச் சேர்க்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டு இன்று தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர் மாறியிருக்கிறார். அமைச்சரவை மாறியிருக்கிறது. தனித்து நின்ற நீலம் இன்று பச்சையுடன் கலந்து இருக்கின்றது. போதாக் குறைக்கு அரசாங்கத்தின் அனுசரனையுடன் வீட்டுக்கும் எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கின்றது. அரசியலில் இவ்வாறு பரபரப்பான மாற்றங்கள் நடந்திருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர் மனங்களிலும் அவர்கள் செயல்களிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா…? அவர்கள் கூறும் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுகின்றதா என்ற மிக்கப்பெரிய கேள்வியை எழுப்ப வேண்டிய தேவையும் உள்ளது. காரணம் வடக்கு- கிழக்கில் பலப்படுத்தப்படும் குடியேற்றத் திட்டங்கள் முன்னைய அரசின் நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கமும் இருப்பதையே வெளிப்படுத்துகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிவரும் அதேவேளை மறுமுனையில் திட்டமிட்ட குடியேற்றங்களை பலப்படுத்தி தமிழ் பேசும் மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் நிலையையும், அவர்களிடத்தே சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையையும் இந்த அரசாங்கமும் தக்க வைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிங்கள குடியேற்றங்கள் என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது கல்லோயா குடியேற்றத் திட்டத்துடன் டி.எஸ். சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டு அதன்பின்னர் விஸ்வரூபம் எடுத்தது. இலங்கை இராணுவம் கூட யுத்தங்களில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பு படையாகவே செயற்பட்டிருந்தது. மணலாறை வெலிஓயா என பெயர் மாற்றி அதனை அண்டிய தமிழ் கிராமங்கள் பதவியா, கஜபாகுபுர என நீண்டு இன்று ஓதியமலையை தொட்டு நிற்கின்றது. முல்லைத்தீவிலும் வெலிஓயா தமிழர் நிலப்பரப்பை நோக்கி அகலக்கால் பதித்து வருகின்றது. அந்த குடியேற்ற மக்களை பலப்படுத்தி குடியேற்றங்களை விஸ்தரிக்கும் முகமாக அபிவிருத்தி வேலைகளும் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போதும் கூட அங்கு அரசாங்கம் தனது வேலைகளை விரிவுபடுத்தியிருக்கின்றது.
முல்லைத்தீவு மட்டுமல்ல. வவுனியா மாவட்டத்திலும் அதேநிலை தான். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துடன் ஒன்றித்து போன விவசாய காணிகளைக் கொண்ட ஒரு வளமான பிரதேசமாக கொக்கச்சான்குளம் இருந்தது. யுத்த சூழ்சிலையால் இடம்பெயர்வுகளை சந்தித்ததால் அந்த நிலங்கள் சிறிய பற்றைகாடுகளாகவும் மாறியிருந்தது. அம் மக்கள் அப்பகுதியில் விவசாயத்தை செய்து பிழைத்துக் கொள்ளவதற்கு கூட அந்த குளம் புனரமைத்துக் கொடுக்கப்படவில்லை. மாறாக அம்பாந்தோட்டை உள்ளிட்ட தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 3000 வரையிலான சிங்கள குடும்பங்கள் அவசர அவசரமாக குடியேற்றப்பட்டு அவர்களுக்கு வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டது. அவர்களுக்காக அந்த குளமும் புனரமைக்கப்பட்டு தமிழர் நிலம் முழுதாக விழுங்கப்பட்டது. யுத்ததால் தமது இருப்பிடங்களை முற்றாக இழந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறிய போதும் வீடின்றி பலர் தவிக்க, அபகரித்து குடியேற்றம் செய்த இந்த மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன. இது தான் நல்லிணக்கமா என்ற கேள்வி இங்கு இயல்பாக எழுகின்றது. இது கடந்த மஹிந்தா ஆட்சியில் நடைபெற்றது. ஆனால் இந்த அரசாங்கத்தின் செயலும் புதிய மந்தையில் பழைய கல்லு என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது
வழிந்து குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான வீதியை புனரமைத்து தரும்படி கோரி வந்த நிலையில் தென்னிலங்கையின் கடும்போக்கு அமைப்புக்களான பொதுபலசேனா, சிஹலே உள்ளிட்ட அமைப்புக்கள் இந்த மக்களை சந்தித்து இனவாதக் கருத்துக்களை விதைத்திருந்தது. தற்போது ஜனாதிபதி நேரடியாக அங்கு வந்து அந்த மக்களுக்கான சுத்திகரித்த நீர் விநியோக திட்டத்தை ஆரம்பித்ததுடன், வீதி அபிவிருத்தி குறித்தும் தனது நேரடி அவதானத்தை செலுத்தியிருந்தார். குடியேற்றப்பட்டவர்களை தமது வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்ளவும், வன்னி மாவட்டத்தின் இனப்பரப்பலினை மாற்றி அமைப்பதற்கும் இவர்களை தொடர்ந்தும் இங்கு தங்கவைக்க வேண்டிய தேவை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அவசியமாகிறது. அதற்கான ஒரு உத்தியாக கூட இதைச் பார்க்கலாம். ஆனாலும் கொக்கச்சான்குளம் என்ற தமிழர் நிலத்தை அழித்து காலபோபஸ்வேவ என பெயர்மாற்றி நடக்கும் இந்த வேலைகள் நல்லிணக்கத்தை ஒரு போது கட்டியெழுப்ப உதவப்போவதில்லை. ஏனெனில் நேரடியாக யுத்தத்தால் பாதிப்படைந்த பலர் இன்றும் வடக்கில் முகாம்களில் அவலவாழ்வு வாழ்கின்றனர். அப்படி இருக்கையில் திட்டமிட்ட குடியேற்றத்திற்கான அவசரம் என்பது திட்டமிட்ட ஒரு நிலஅபகரிப்புக்கான நிகழ்ச்சி நிரலாகவே கருதஇடமுண்டு. இந்த வகையில் சுமார் 47.3 சதுரகிலோமீற்றர் (4730 ஹெக்ரெயர், ஒரு ஹெக்டெயர் என்பது சுமார் இரண்டரை ஏக்கர்) பரப்பளவு வவுனியா மாவட்டத்தின் ஏனைய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுடன் யுத்தத்திற்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் தமிழர் நிலமான கொக்குவெளி பிரதேசம் தற்போது முழுமையாக கொக்கலியவாக மாறி அது ‘சத்விரு சங்ஹிந்த’ என்ற சிங்கள பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொருளே நல்லிணக்க கிராமம். தமிழர் பகுதியில் இராணுவத்தை குடியேற்ற உருவாக்கப்பட்டுள்ள இந்த நல்லிணக்க கிராமத்திற்கு கூட தமிழ் பெயர் சூட்ட இந்த அரசாங்கம் தயக்கம் காட்டுகின்ற போது நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி இயல்பானதே. இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். கொழும்பு ருத்திரா மாவத்தை பகுதியில் சொந்தமாக பணம் சேர்ந்து காணி வாங்கி தமிழ் சங்கம் அமைக்கப்பட்டதுடன் அப்பகுதியில் அதிக தமிழ் மக்களும் வாழ்கின்றனர். அந்த ஒழுங்கையின் பெயரை தமிழ் சங்க வீதி என மாற்றம் செய்ய பலதடவை கோரிய போதும் அரசாங்கம் உடன்படவில்லை. ஆனால் தமிழர் பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு முன்பாகவே பெயர் மாற்றங்கள் இடம்பெற்றும் வருகின்றன. கொழும்பில் ஒரு பெயர்பலகையை தமிழில் மாற்றுவதற்கு கூட இந்த நல்லாட்சி அரசாங்கமும் தயாராகவில்லை.
நாவற்குழி பகுதியில் குடியேற்றப்பட்ட தமிழர் நிலத்தில் கூட ‘சிங்கள ராவய கிராமம்’ என தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பகுதியில் தமிழ் மக்கள் வசிக்கும் சில ஒழுங்கைகளின் பெயர்கள் எசலபெரேரா வீதி, அனுரா பெரேரா வீதி என மரணித்த இராணுவ வீரர்களின் பெயர்களாக மாறியிருக்கின்றன. வடக்கில் இதை செய்யும் அரசாங்கம் தமிழ் சங்க வீதி விவகாரத்தை எப்படி நோக்குகின்றது என்ற கேள்வியை தமிழ் அறிஞர்கள் கேட்கின்றார்கள்.
தற்போது வவுனியாவில் 54 விகாரைகளை புனரமைக்க சீனா உதவி வழங்கியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. அதன் ஒரு கட்டமாக கனகராயன்குளம், பெரியகுளத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியில் உள்ள புத்தர் சிலையை விஸ்தரிக்க முனைப்பு காட்டப்பட்டும் வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கூட சிங்கள குடியேற்றம், இனப்பரப்பலை சீர்குலைத்தல் என்பவற்றில் இந்த அரசாங்கமும் முனைப்புடன் செயற்பட்டு வருவதையே இது காட்டுகிறது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தில் வடமாகாண சபையின் உத்தரவை மீறி பௌத்த பிக்கு ஒருவர் தனியார் காணியில் அடாத்தாக பௌத்த விகாரை ஒன்றினையும் அமைத்து வருகிறார். இவ்வாறு வடக்கில் சத்தமில்லாது நடக்கும் நிலஅபகரிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முகமாக நல்லாட்சி ஜனாதிபதி கூட வன்னிப் பகுதிக்கு இரு தடவை விஜயம் செய்து அம் மக்களுக்கான உதவித் திட்டங்களை வழங்கியிருக்கின்றார்.
வடக்கு நிலமை இவ்வாறிருக்க, கிழக்கிலும் நில அபகரிப்பு தொடர்கிறது. கிழக்கின் பல பகுதிகள் கடந்த காலத்தில் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மட்டக்களப்பின் எல்லைக்கிராமமான மாதவணை மற்றும் மயிலத்தமடு பகுதியில் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டும் வருகிறது. இவ்வாறான நிலமைகள் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடரே செய்கிறது.
தமிழ் மக்கள் கடும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கத்தை உருவாக்கியிருந்தார்கள். நல்லாட்சி, நல்லிணக்கம், இனப்பிரச்சனை தீர்வு என இந்த அரசாங்கம் கூறிவரும் நிலையில் காயப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்த தவறி வருகின்றது. மாறாக அவர்களின் மனங்களில் மீண்டும் காயத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளுக்கு துணைபோகின்றது. இவ்வளவு விவகாரங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சர்வதேச மட்டத்தில் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய இராஜதந்திரிகள் குழு வடமாகாண முதலமைச்சரை சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களை சந்தித்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது முதலமைச்சர் அவர்களிடம் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் இனியாவது தமிழ் பிரதிநிதிகள் விழித்துக் கொள்வார்களா…?
N5





