செய்திகள்

நளினி தொடர்ந்த வழக்கு: தமிழக அரசை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், வருகின்ற 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ”ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கு கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன் பின்னர், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது.

நான் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி 1994 ஆம் ஆண்டு அரசாணையும் பிறப்பித்தது.

அந்த அரசாணையின்படி, முன்கூட்டியே விடுதலை பெற நான் தகுதியானவள். பலாத்காரம், கொலை போன்ற கொடூர குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் பலர் இந்த அரசாணையின்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

அதனால், என்னையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தமிழக உள்துறை செயலருக்கு னு அனுப்பினேன். இதுவரை அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகின்ற 27-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
R-06