செய்திகள்

நாங்கள் நீதித்துறையை மதிக்கின்றோம்: தமிழ் மக்களுக்கு நீதித்துறை நீதியைத் தரவில்லை

நாங்கள் இலங்கையின் நீதித்துறையை மதிக்கின்றோம். ஆனால் நீதித்துறை தமிழ் மக்களுக்கு நீதியைத் தரவில்லை என நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் சாட்சியமளிக்கும் குழுவிடம் செ.சபாநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான சாட்சியமளிப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

இலங்கையைப் பொறுத்தவரை நீதித்துறை சரியாக இல்லை. நாங்கள் அன்று தொடக்கம் இன்று வரை நீதித்துறையை மதிக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நீதித்துறை சரியான நீதியைப் பெற்றுத் தரவில்லை. குறிப்பாக முன்னர் நடந்த இனக்கலவரம் மற்றும் இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்ட குமரபுரம் படுகொலை சம்பவங்கள் தொடர்பில் சரியான நீதி கிடைக்கவில்லை. கண்முன்னே நடந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் கண்முன்னே சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு நல்விணக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.

இராணுவம் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்களை செய்து வருகின்றது. வவுனியாவில் வைத்தியசாலை, கோவில், பாடசாலை என்பவற்றுக்கு மத்தியில் உள்ள குடியிருப்பு கலாசார மண்டபம் கூட இராணுவ முகாமாக உள்ளது. இது போல பல பொது இடங்கள், தனியார் காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளது. தற்போதும் அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் துணை போய்கொண்டிருக்கின்ற நிலையில் நாம் ஒரு நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது. இதில் மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்து முடியும். இந்த நாட்டில் இனக்கலவரம் முதல் இறுதி யுத்தம் வரை நடத்த குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மூலமே நாம் தீர்வைப் பெற முடியும். அவ்வளவு தூரம் எமது மக்களும் சாமும் இந்த அரசாங்கத்தின் நீதிப்பொறிமுறைகளில் நம்பிக்கையிழந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

N5