செய்திகள்

நாய்கள் மீது அதிக பாசம் வைத்தவர் ராணி எலிசபெத் – ஒப்பரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்றால் என்ன ?

உலகளவில் நீண்ட காலம் அரசியாக இருந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு 4 குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள் உள்ளனர். இருந்தாலும், அவர் நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் உயிரிழந்த நிலையில், பெம்புரோக் வெல்ஷ் கோர்கிஸ் இன நாய்கள் 2, டோர்கி இன நாய் ஒன்று, காகர் ஸ்பேனியல் இன நாய் ஒன்று என நான்கு நாய்களை வளர்த்து வந்தார்.

எலிசபெத், ராணியாக இருந்த காலத்தில் 30 நாய்களை வளர்த்துள்ளார். அதில், சூசன் என பெயரிடப்பட்ட முதல் நாயை தனது 18 வயதில் பரிசாக பெற்றார். சக்தி மற்றும் வேகம் காரணமாக கோர்கிஸ் ரக நாய்களை எலிசபெத் அதிகம் விரும்பினார். நாய்களை நேரடியாக கவனித்து கொண்ட அவர், உணவு அளிப்பது, நடைபயிற்சி அழைத்து செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

கணவர் பிலிப் காலமான பிறகு, தனது மகன் ஆண்ட்ரூவிடமிருந்து இரண்டு நாய்களை பரிசாக பெற்றிருந்தார். தற்போது ராணி காலமான நிலையில், அவர் வளர்த்து வந்த நாய்கள் நிலை என்ன என எழுந்துள்ளது.இது தொடர்பாக அரச குடும்பம் குறித்து ஆய்வு செய்யும் இன்கிரிட் சேவர்ட் கூறுகையில், ராணி வளர்த்த நாய்களை இனிமேல் குடும்பத்தினர் கவனித்து கொள்வார்கள். முக்கியமாக ஆண்ட்ரூ நாய்கள் மீது கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது. ராணி, நாய்கள் மீது அன்பு செலுத்தினார். முக்கியமாக நாய்களை நேசித்தார். அவரின் முதல் மற்றும் கடைசி அன்பாக நாய் இருந்துள்ளது என்றார்.ராணிக்கு பிறகு நாய்கள் நிலை என்ன என்பது குறித்து அரச குடும்பம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அவைகள் பாதுகாப்பான கைகளுக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதனை ‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்று குறிப்பிடுகின்றனர்.1960கள் முதலே இந்தத் திட்டம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எலிசபெத் மகாராணி உயிரிழக்கும் போது, அங்கு 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். எலிசபத் மகாராணி உயிரிழக்கும் போது, அது முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின் அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் பாதுகாப்பான தொலைப்பேசி இணைப்பில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என்ற வாக்கியத்தை கூறுவார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்த செய்தி பகிரப்படும்.

பிபிசி டிவி மற்றும் ரேடியோ மூலம் எலிசபெத் மரணம் குறித்து செய்தி பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து பிபிசி ஊடகங்களிலும் பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எலிசபெத் மகாராணி இறுதிச்சடங்கு குறித்த நேரலை செய்யப்படும். பார்லிமென்டில் எம்.பி.க்கள் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

ராணியின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்போர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்படும்.10ஆம் நாளில் இறுதிச்சடங்கு நடக்கும். எலிசபெத்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இது தவிர அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், பார்லிமென்ட் நடந்து கொண்டு இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும்.(15)