நாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்
மருத்துவர் சி. யமுனாநந்தா
விரைந்துவரும் நகரமயமாதல் நாய் மனித மோதலை உச்சம்பெற வைத்துள்ளது. ‘நாய் வீட்டைக் காக்கும்’ என்பது பாலர் வகுப்பில் முன்னைய காலங்களில் கற்பிக்கப்படும் வசனம் ஆகும். ஆனால் இன்று பரீட்சயமாக உள்ள வசனம் ‘நாய் கடிக்கும் கவனம்’ என்பதாகும். நாய்களும் மனிதர்களும் ஒன்றாக வாழ்ந்த சூழல் புராணக் கதைகளில் இருந்து இக்காலம் வரைக்கும் உள்ளது. நாயினை எம்முன்னவர்கள் வளர்ப்புப் பிராணியாகப் போற்றினர். கிராமங்களில் நாய்கள் வீட்டைக் காப்பதற்கும், வேட்டையாடுவதற்கும் உதவியாக அமைந்து இருந்தன. நாய்களின் சுதந்திரமான நகர்வுகளுக்கு விரைவான நகரமயமாதல் குந்தகமாக அமைந்து வருகிறது. கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் புதிய அகலமான வீதிகள் நாய்களின் நடமாட்டத்திற்கு ஆபத்தாக மாறியுள்ளது. வேலிகளாக அமைந்த வீட்டின் எல்லைகள் மதில்களாக மாறியமை நாய்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்தியது. இதனால் வீதிகளில் நாய்கள் சிறைப்படும் நிலையும் வீதியில் செல்லும் வாகனங்களால் கொல்லப்படும் நிலையும் அதிகரித்துள்ளது. கட்டுப்பாடின்றி அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் தினமும் நூற்றுக்கணக்கான நாய்களை வீதிகளில் கொன்று வருகின்றன. கிராம வீதிகள் அகலமாதலும் நாய்கள் விபத்துக்கு உட்பட ஒரு காரணம். நாய் மனித மோதலில் இப் பரிமாணம் மிருகநேய ஆர்வலர்களால் உற்றுநோக்கப்படல் வேண்டும். உண்மையில் வீதிகளில் நாய்கள் திசைமாறி வரலாம் என்ற நிலையில் மோட்டார் வாகனங்களை எச்சரிக்கையாகவும், கட்டுப்பாடான வேகத்துடனும் செலுத்தினால் நாய்களுடன் விபத்து ஏற்படும் நிலை ஏற்படாது. எனவே வாகன ஓட்டிகளுக்கு நாய்களின் சார்பாக விழிப்பினை ஏற்படுத்த வேண்டியது மிருகநேயம் மிக்க செயற்பாடாகும்.
நாய் மனித மோதலின் விளைவாக விபத்தினால் பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்து தெருவில் நாய் கடிப்பதனாலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு-கின்றனர். இதனால் நாய்களுக்கு எதிராக குரோத மனப்பாங்கு சமூகத்தில் இயல்பாகவே ஏற்படுகின்றது. இதன் உச்சமாக ஊர்களில் உள்ள நாய்களை எல்லாம் பிடித்து அடைக்கும் செயற்பாடு ஊக்குவிக்கப்படுகின்றது. இது மிருகநேய அடிப்படையில் தவறானது. மேலும் பாரதத்தில் தருமரின் சாபமும் நிறைவேறாது போகும்.
வளவுகள் யாவும் மதில்களால் அமைக்கப்படுவதால் வேலியில் உள்ள மரங்களிற்கு சிறுநீர் கழிக்கும் நாய்கள் இன்று வேலிகள் இன்றி வீடுகளின் வாயில்களில் சிறுநீர் தொந்தரவு செய்கின்றன. இது நாய் மீது கோபமுடன் நோக்கும் தன்மையினை ஏற்படுத்தி உள்ளது.

இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் மக்கள் குடியிருப்புக்களுக்கு இடையே உறவினர்கள் வேலிகள் இன்றி ஒன்று கூடினர். அதனையே நாய்கள் இன்றும் செய்கின்றன. வேலிகள் மதில்களான பின் வீடுகளிற்குள் நாய்களின் சுதந்திர நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் நகரமயமாகும் எம் பிரதேசத்தில் வீதிகளிலேயே நாய்கள் முடங்கவேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. வீதிகளோ தார் வெப்பத்தினால் கொதிக்கும் நிலையில் காணப்படும். இதற்கு இன்று ஆலய வீதிகளும், குச்சொழுங்கைகளும் விதிவிலக்கல்ல. வெட்கையினைத் தணிப்பதற்கு மரங்கள் நிறைந்த வேலிகள், மதில்களாக மாற்றமடைந்தமையால் பாதகநிலையே உள்ளது. இதனால் நாய்களுக்கு குட்டைநோய் இலகுவில் ஏற்பட்டு விடுகின்றது. இது நாய்களை அவலட்சணமாக நோக்கும் நிலை தெருக்களில் ஏற்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு நீர் வெறுப்புநோய் தடுப்பு மருந்து முறையாக வழங்குவதாலும் நாயினால் கடியுண்டவர்கள், முறையாக நீர் வெறுப்புநோய் தடுப்பு மருந்தினை வைத்தியசாலையில் பெறுவதனாலும் நீர் வெறுப்புநோயினை இல்லாது ஒழித்திடலாம். நீர் வெறுப்புநோயினை ஒழிப்பதற்காக நாய்களை ஒழிப்பது தவறானதாகும். எனவே நாய் மனித மோதல் என்பது எமது சூழலில் அன்றாடம் நிகழும் ஓர் அசாதாரண நிலையாகும். எனவே யானை மனித மோதல் போல் விலங்கு நேய ஆர்வலர்களால் சமூக விழிப்பரப்பில் புகுத்தப்பட வேண்டியது.




