செய்திகள்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை ஜனவரியில் நிறைவேற்ற முயற்சி!

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை அடுத்த மாதம் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை குழுநிலை விவாதத்தின் போது மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கடந்த ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

‘நிகழ்நிலை காப்பு ஆணைக்குழுவை தாபிப்பதற்கும், இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்த சில கூற்றுக்களின் நிகழ்நிலைத் தொடர்பாடலை தடை செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும்,தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும்  உறுதிப்படுத்தப்படாத நிகழ்நிலைக் கணக்குகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும்

இலங்கையில் தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை அமைவிடங்களை  அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும்இ நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக 40 இற்கும் அதிகமான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அல்லது. அதன் விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என்றும் சில சரத்துக்களில் குழுநிலைத் திருத்தங்களைத் தொடர்ந்து எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்றும்  உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இந்த மசோதாவில் உள்ள சரத்துக்கள் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்  தீர்மானித்துள்ளது. இருப்பினும் குழுநிலையில் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால், மசோதாவை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சிவில் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். ஒருசில சிவில் அமைப்பின் திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளனர்.இவ்வாறான பின்னணியில் குழுநிலை வேளையில் பல ஏற்பாடுகளை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

-(3)