நிதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 94 வாக்குகளால் தோல்வி
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது பொது எதிரணியினர் பாராளுமன்றத்தில் இன்று கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம் எதிர்கொண்டு நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. 28 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐ.தே.க. மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
பொது எதிரணி மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பு இடம்பெற்ற போது கூட்டமைப்பு எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அப்போது சபையில் இருக்கவில்லை.
இந்த நிலையில் 94 வாக்குகளால் பிரேரணை தோல்வியடைந்தது.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியைச் சேர்ந்த 37 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு மார்ச் 24 ஆம் திகரி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் இது குறித்த விவாதம் இடம்பெறவிருந்த போதிலும், பாராளுமன்ற ஒலி வாங்கி வழுதடைந்தமையால் விவாதம் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
R-06




