நித்தியானந்தாவின் கைலாசா பிரதிநிதிகள் எப்படி ஐநா கூட்டத்தில் கலந்துகொண்டனர்?
நித்தியானந்தாவின் ‘கைலாசா’ என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகளின் ஐ.நா ஏற்பாடு செய்திருந்த ஜெனீவா கூட்டங்களில் பேசிய கருத்துக்களை நிராகரிப்போம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, இந்தியாவைச் சேர்ந்த நித்தியானந்தா உருவாக்கியதாக அவரால் அழைத்துக் கொள்ளப்படும் கைலாசா என்ற சர்ச்சை தேசத்தின் பிரதிநிதிகள் சிலர், ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது.
காரணம், இதுநாள் வரை எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த இந்த கைலாசாவின் பிரதிநிதிகள் ஐ.நா கூட்டத்தில் கைலாசா தேசத்தின் பிரதிநிதிகள் ஆக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்ற காட்சிகள், பரவலான கவனத்தை ஈர்த்தது.
இதனால், தங்களை ஐ.நா அங்கீகரித்து விட்டது போல நித்தியானந்தாவின் சீடர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் அந்த பிரதிநிதிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் ஒரு கற்பனையான நாட்டின் பிரதிநிதி பதிவு செய்த வார்த்தைகளை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
ஐ.நா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும் கைலாசா பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா அதிகாரி பிபிசிக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், “யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா (யுஎஸ்கே) பிரதிநிதிகள் பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் இரண்டு ஐநா கூட்டங்களில் கலந்து கொண்டனர்” என்று கூறியுள்ளார்.
முதலாவது கூட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) பிப்ரவரி 22ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்ததாகும். அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டம், பிப்ரவரி 24ஆம் தேதி பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு (CESCR) நடத்திய நிலையான வளர்ச்சி குறித்ததாகும்.
“பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்” என்று இந்த இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.
-(3)




