‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் 2016 ஆம் ஆண்டில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் பட்டியலில் ‘தமிழ்நாடு’
2016 ஆம் ஆண்டில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் என்று ‘நியூயோர்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள 52 இடங்களை உள்ளடக்கிய பட்டியலில் இந்தியாவில் ‘ தமிழ் நாடு’ மட்டுமே உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 24 ஆவது இடம் கிடைத்துள்ளது.
முதல் மூன்று இடங்களையும் மெஸ்சிக்கோ , பிரான்சின் போர்டியக்ஸ் மற்றும் மால்டா தீவு ஆகியவை பிடித்துள்ளன.
‘இந்தியாவின் முதன்மையான பண்பாட்ட்டின் புதிய நுழைவாயில்கள்’ என்று தமிழ் நாட்டை விபரித்துள்ள நியூயோர்க் டைம்ஸ்’ இந்தியாவின் வட பகுதிகள் அவற்றின் மொகலாய காலத்து அரண்மைகள் மற்றும் கோட்டைகள் காரணமாக எவ்வளவுதூரம் உல்லாச பயணிகளை கவர்ந்துள்ளனவோ அந்தளவுக்கு தென் இந்தியாவின் தமிழ்நாடு அதன் மிகவும் செழிப்பானதும் அறிவதற்கு பல வரலாற்று விடயங்களை கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் கட்டடக்கலை சிறப்பு மற்றும் அவற்றின் வரலாற்று சிறப்புக்களை குறிப்பிட்டுள்ள அப் பத்திரிகை விஷேடமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் போன்றவற்றின் சிறப்புக்களை குறிப்பிட்டுள்ளது.
உலகில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளமை இது தான் முதல் தடவை அல்ல. 2015 இல் ‘ தனிமையான பூமியில் பயணம் செய்ய வேண்டிய சிறந்த இடங்கள் ‘ என்ற பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தது.