செய்திகள்

நிலுவை கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கவில்லை : பிரதமருடன் கதைப்பதாக கூறியவர்கள் எங்கே தொழிலாளர்கள் கேள்வி

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி மலைலயகமெங்கும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தொழிற் சங்கங்களும் மற்றும் முதலாளிமார் சம்மேளமும் 730 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணங்கியுள்ள போதும் அந்த சம்பள அதிகரிப்பின் கடந்த 19 மாதங்களுக்கான நிலுவை கொடுப்பனவை வழங்குவதா இல்லையா என இது வரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் 730 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் தமக்கு நிலுவையுடன் 1000 ரூபா சம்பள அதிகப்பே வேண்டுமென கோரி இன்றைய தினமும் தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாட திரும்பிய பின்னர் அவருடன் பேசி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்போம் என அண்மையில் தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இது வரை அந்த கலந்துரையாடலுக்கு அவர்கள் நடவடிக்கையெடுக்காதிருப்பது ஏனென நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மக்கள் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)