செய்திகள்

நீதித்துறைச் செயற்பாடுகள் தூய்மையானதாக இருக்க வேண்டும் : ஜனாதிபதி

நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி நீதிச்துறைச் செயற்பாடுகள் மிகவும் தூய்மையாகவும், வெளிப்படைத்தன்மையானதாகவும் இடம்பெற வேண்டுமென்பதே தனது நிலைப்பாடாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2017 தேசிய சட்ட சம்மேளனத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுபவராகவும் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களின் ஒரு பகுதியை பாராளுமன்றத்தக்கும், ஏனைய சுயாதீன நிறுவனங்களுக்கும் ஒப்படைத்த ஜனாதிபதி என்ற வகையில் தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தீர்மானங்களை எடுக்க தயாரில்லை எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அனைத்து துறைகளிலும் தீர்மானங்கள் எடுக்கும் போது அந்த துறைகளிலுள்ள நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடியே மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்ற கட்டமைப்பில் மக்கள் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடையும்போது பெரும்பாலானவை விவாதங்களுடன் நின்றுவிடுவதாகவும், அதற்கான தீர்வுகள் கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வழக்குகள் தாமதமடைதல் போன்ற பிரச்சசினைகளைத் தீர்ப்பதற்கு நீதித்துறையிலுள்ள அனைவரும் கூட்டாக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஆகியோர் உள்ளிட்ட நீதித்துறை நிபுணர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். -(3)