நெல்லினை கொள்வனவு செய்யுமாறு வவுனியாவில் விவசாயிகள் குழப்பம்
வவுனியாவில் தமது நெல்லினை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரியதால் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
வவுனியா, வேப்பங்குளம் நெற்களஞ்சியசாலையில் இச்சம்பவம் இன்று இடம்பெற்றது.
பெரும்போக நெற்செய்கை கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. அதில் முதல்கட்டமாக ஓமந்தை, வேப்பங்குளம், நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், முறையான அறிவித்தல் வழங்கப்படாது குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் நெல் கொள்வனவு செய்யப்பட தாம் அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்தே விவசாயிகள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,
தாம் காட்டு யானை, பன்றி போன்ற விலங்குகள், இயற்கை என்பவற்றிடம் இருந்து பாதுகாத்தே இந்த நெல்லை உற்பத்தி செய்துள்ளோம். அதனை அரசாங்கம் அறிவித்த நியாய விலையில் விற்பனை செய்வதற்காக வேப்பங்குளம் பகுதியில் உள்ள நெற்களஞ்சியசாலைக்கு கொண்டு வரும்போது அதனை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தம்மிடம் களஞ்சியப்படுத்த போதாது எனக் கூறி குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் கொள்வனவு செய்கிறார்கள். இதனால் தாம் நெல்மூட்டைகளுடன் தினமும் வந்து அலைகழிகின்றோம். உற்பத்தி செய்வதை விட கொண்டு வந்து கொண்டு போற செலவே எமக்கு அதிகமாக இருக்கு. எனவே எமது நெல்லையும் கொள்வனவு செய்யுமாறு கோரி நெற்களஞ்சியசாலை முன் அமைர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டனர். சுமார் 100 வரையான விவசாயகள் இந்தக் குழப்பதில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் விவசாய அமைச்சின் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி எஸ். ஈஸ்வரன் அவர்களிடம் கேட்ட போது,
கடந்த வருடம் சிறுபோகம், பெரும் போகம் என்பவற்றில் கொள்வனவு செய்யப்பட்ட ஆறாயிரத்து 725 மெற்றிக் தொன் நெல் தற்போதும் களஞ்சியசாலைகளில் உள்ளது. இதனால் இருக்கின்ற களஞ்சியசாலைகளின் இடத்திற்கு ஏற்ப தற்போது கொள்வனவு இடம்பெறுவதுடன், புதிய சில களஞ்சியசாலைகளையும் தயார்படுத்தியுள்ளோம். அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள களஞ்சியசாலைகளிலும் தரமான நெல் கொள்வனவு செய்யப்படும். வவுனியா மாவட்டத்தில் 3,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளோம். விவசாயிகள் இடவசதியை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
N5






