செய்திகள்

நேமிவிதான மேக பிரகாசமூட்டல் எனும் பூகோள வெப்பக் காவுகையை புதியன புரிதல் மூலம் எதிர்கொள்ளல்

மருத்துவர். சி.யமுனாநந்தா

பூகோள வெப்பமாதல் இற்றைக்கு 50 வருடங்களிற்கு முன் எதிர்வு கூறப்பட்டதை விட பலமடங்கு அதிகமாக நிகழ்ந்து வருகின்றது. இதனால் பூமியின் வெப்பநிலை ஒரு பாகை செல்சியஸ் அளவில் சராசரியாக அதிகரித்தது மட்டுமன்றி கடல் நீரோட்ட மாற்றமும் கடல் மட்ட அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட, தென் துருவங்களில் பனிப்பாறைகள் விரைவாக உருகிவருகின்றன.

பூகோள வெப்பமடைதல் குறைப்பதற்கான மனித செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் சனத்தொகைப் பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரக் காரணிகள், இராணுவச் செயற்பாடுகள் உலகில் பசுமைச் சூழலிற்கு எதிராகக் காணப்படுகின்றது. இதனால் பூமாதாவை பாதுகாப்பதற்கான மாற்று உபாயங்களை விஞ்ஞானிகள் கருத்தில் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

பூகோள வெப்பமாதலை தடுப்பதற்கு செயற்கையான முகில்களை வானவிதானமாக சமுத்திரங்களின் மேல் குறிப்பாக வடதுருவம், தென்துருவம் என்பவற்றில் மேலும் பூமியின் மத்திய கோட்டினை மருவியும் அமைப்பதனால், பூமிக்கு சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தெறிப்படையச் செய்து, பூமியின் வெப்பநிலை உயர்வை மட்டுப்படுத்தலாம் என்ற கருதுகோளினை நடைமுறைப்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் தேசிய சமுத்திர வான்வெளி ஆய்வு நிறுவகம் கடந்த 30 வருடங்களாக பரிசீலித்து வருகின்றது. சமுத்திரங்களில் வானவிதானமான முகில்களை கடல் நீரில் இருந்து உருவாக்குவதற்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் உலகில் குறித்த ஆள்கூற்றுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வானத்தில் உள்ள முகில் கூட்டங்களிற்கு கடல் நீர் பாய்ச்சப்பட்டு முகில்களின் அடத்தியினை கூட்டியும் பிரகாசமாக்கி சூரிய புற ஊதாக்கதிர்கள் பூமியைப் பாதிக்காது மீளத்தெறிப்படைய செய்யலாம். ஆதனால் முகில்களுக்கு கீழான வெளிப்பரப்பு குளிர்ச்சியாகக் காணப்படும். இத் தொழில்நுட்பம் நேமிவிதான மேக பிரகாசமூட்டல் இன்னும் கருதுகோள் நிலையிலேயே உள்ளது. (Marine Cloud Brightening).

ஐக்கிய அமெரிக்காவில் விஞ்ஞான முன்னேற்றங்கள் தொடர்பான சஞ்சிகையில் கடந்த வாரம் இத்தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மை குறித்து சிபார்சுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேலதிக விஞ்ஞான ஆhரய்ச்சிகள் செய்யப்படல் வேண்டும். அதில் ஆய்வு கூட ஆய்வுகள், வெளிக்களப் பரிசோதனைகள், மேகமாதிரிகளின் கட்டமைப்பு உருவாக்கம் (Cloud modeling) என்பன முக்கியமானவை. நேமிமேகவிதான பிரகாசமூட்டல் (MCB) தொடர்பான நாட்டம் தற்போது சூழல் இயற்பியல் விஞ்ஞானிகளிடையே அதிகரித்துள்ளது. ஆனால் திட்டங்களை தீர்மானிக்கும் மேல்நிலை அதிகாரிகளிடம் போதிய தரவுகள் இன்மையினால் இச்செயற்திட்டம் தொடர்பாக திடமான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையும் அமுல்படுத்த முடியாத நிலையும் உள்ளது.

தற்போது சூழல் தொடர்பாக இயற்பியல் விஞ்ஞானிகளிடமும் உள்ள புலமையும் அவர்களிடம் இல்லாத புலமை வெளியும் நிவர்த்தி செய்யும் பட்சத்தில் எதிர்காலத்தில் குறிப்பாக 2030 ஆண்டளவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரலாம். நேமிவிதான மேகப் பிரகாசமூட்டல் செயற்படுத்துவதற்கு சமுத்திரத்திற்கு மேல் சிறிய தூரத்தில் மேகக்கூட்டங்கள் உருவாக்கப்படும். இவை சூரிய கதிர்களை அதிகளவில் விண்ணோக்கி தெறிப்படையக் கூடியதாகவும் அதிக நேரம் வானில் இருக்கக்கூடியதாகவும், உப்புச்செறிவு மிக்க கடல்நீர் கப்பல்களில் இருந்த முகில்களை நோக்கி விசிறப்படும்.

இவ்வாறு முகில் கூட்டங்களில் உள்ள நீராவியின் மேற்பரப்பில் உப்புத்துணிக்கைகள் சேர்க்கப்படும். ஆதனால் மேலதிக முகில் பரப்புக்கள் உருவாக்கப்பட்டு சூரிய ஒளி விண்வெளிக்கு மீளத் தெறிக்கவிடப்பட்டு பூமி குளிர்ச்சியாக்கப்படும். இச்செயற்பாடு சாதாரண விடயமல்ல. அதற்கு சரியான பருமன் உடைய உப்புத்துணிக்கைகள் முகில் கூட்டத்திற்குச் செலுத்தப்படல் வேண்டும். பகற்பொழுதின் சரியான நேரத்திலும் பருவகால நிலையிலும் குறிப்பிடத்தக்கதாக அதிக பரப்பளவிலும் சமுத்திரத்தில் செயற்படுத்தல் வேண்டும்.

நேமிவிதான மேகப் பிரகாசமூட்டல் பொறிமுறையானது பூகோள வெப்பமடைதலுக்கு தீர்வாகுமா என்பதற்கு தற்போது உறுதியாக பதிலைக்கூற முடியாவிட்டாலும் சிறிது சிறிதாக இச்செயற்பாட்டை விரிவுபடுத்தும் போது முற்றாகச் சாத்தியமாக்கலாம். ஆனால் செயற்கையாக பூகோளத்தினை குளிர்வித்தல் மேற்கொண்டாலும் தற்போது தொடரும் பச்சைவாயு வெளியேற்ற அளவினைக் கட்டுப்படுத்தலின் நாம் சூழல் நேயமானவர்களாக இருத்தல் வேண்டும்.

மிகவும் அண்மைக்காலமாக வேகமாக நிகழும் பூகோள வெப்பமாதலை நிறுத்த அல்லது குறைக்க நாம் சடுதியான மாற்று வழிகளைக் கையாள வேண்டிய தேவையுள்ளது. இதற்கு விரைவான ஆராய்ச்சிகளும் பௌதீக விஞ்ஞானம் சார்ந்த கேள்விகளுக்கான விடைகளும் மனித பரிமாணத்திற்கான விடைகளும் அறியப்படல் வேண்டும்.

சூழல் வெப்பநிலையினை குறைப்பதில் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டை குறைத்தல் மிகவும் முக்கியமானது நேமி விதான மேகப்பிரகாசமூட்டல் சூழல் வெப்பமடைதலால் ஏற்படும் பாரிய தாக்கங்களைக் குறைக்க உதவும். மேலும் இத்தகைய செயற்பாடுகளில் மிகவும் அவதானம் இருத்தல் அவசியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது கண்காணித்தல் அவசியம்.

மேலும் உலகக்காலநிலை மாற்றப்படும் போது வறிய நாடுகள் பாதிக்கப்படாது. சூழல் நேய சர்வதேசக் கடப்பாடுகள் உருவாக்கப்படல் வேண்டும். மேலும் இத்தகைய நவீனத்துவ காலநிலைக் கட்டுப்பாடு மனித நேயத்திற்கு மிகவும் உறுதுணையாகவும் காலநிலை மாற்றத்தால் பெருகும் நோய்த்தாக்கங்களை குறைப்பதாகவும் வறட்சியால் ஏற்படும் பட்டினியினைப் போக்குவதாகவும் கடல்மட்ட அதிகரிப்பால் இடம்பெயரும் மக்களுக்கு தீர்ப்பளிப்பதாகவும் அமைதல் வேண்டும். மேலும் பூகோளத்தின் வடதுருவம், தென்துருவத்தில் பனிப்பாறைகளின் அழிவினை தடுப்பதாக அமைய வேண்டும்.

இத்தகைய ஆய்வுகளை பாரத விஞ்ஞானிகளும் மேற்கொள்வதனால் எதிர்காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வல்லாதிக்கத்தினையும் உலக முதல் தர வல்லரசு நிலையினையும் அடையலாம்.

தண்புனல் ஞாலம் செழிப்புறு மனிதமாக பூமாதா அமைவதற்கு நேமி விதான மேகப்பிரகாசமூட்டல் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.