செய்திகள்

பக்தர்கள் அலையென திரண்டிருக்க நல்லூர் கந்தன் தேரில் ஆரோகணித்தார்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர் திருவிழா இன்று புதன்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு திசைகளிலும் அலையென திரண்டிருக்க மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜைகளை அடுத்து வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் வெளி வீதியில் எழுந்தருளினார்.

பிராமண உத்தமர்களின் வேதமந்திர உச்சாடனமும் மங்கள வாத்தியங்களும் முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷம் கடலலையை விஞ்சி ஆர்ப்பரிக்க, காண்டாமணியோசை அணி செய்ய நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணித்தார்.

தேர் வீதி உலா நிறைவடைந்ததும் எம்பெருமான், பச்சை சாத்தி பக்திக் கோலத்துடன் மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளினார்.

இலங்கையின் பல பக்கங்களிலும் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். (பட உதவி: nalluran. com)