செய்திகள்

படக் கதைக்காக நிஜத்தில் மொட்டையடித்த நடிகை

‘தமிழ் திரை விருட்சம்’ என்ற நிறுவனம் சார்பில் தமிழ் மணி நாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘கிடாபூசாரி மகுடி’.

ஜெயகுமார் இதனை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் வேலுபிரபாகரனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இப்படத்தில் தமிழ் மணிக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் நக்‌ஷத்திரா நடித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

படத்தில் தமிழ் மணி கோவிலில் கிடா வெட்டும் ‘மகுடி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு காதலியாக வரும் நக்‌ஷத்திரா படத்தின் கதைப்படி தலை மொட்டை அடிக்க வேண்டுமாம். இதனை தயங்கியவாறு படத்தின் இயக்குனர் ஜெயக்குமார் நக்‌ஷத்திராவிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நக்ஷத்திரா சிறிதும் தயக்கமின்றி ‘‘கதைக்காக தானே? நான் ரெடி!’’ என்று கூறியபடி தலையை மொட்டை அடிக்க சம்மதித்துவிட்டாராம். மேலும் அப்படியே படத்தில் நடிக்கவும் செய்துள்ளார் இவர். படத்திற்காக தனது தலைமுடியை தியாகம் செய்த நக்‌ஷத்திராவின் துணிச்சலை அனைவரும் பாராட்டினார்களாம். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.