‘படையினர் வசமுள்ள ஏனைய நிலங்களும் படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும்’
இடம் பெயர்ந்த நிலையில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் எமது மக்களின் நிலையினை நேரில் உணர்ந்து, வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதைப்போல், வடக்கில் ஏனைய மாவட்டங்களிலும் இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் எமது மக்களின் காணி, நிலங்களையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 40 வீதத்திற்கும் அதிகமான எமது மக்களின் காணி, நிலங்கள் எமது மக்களின் பாவனைக்கு விடுவிக்கப்படாதுள்ளன. முல்லைதீவு மாவட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் நிலவுகின்றன. குறிப்பாக, கோப்பாபிலவு பகுதி விடுவிக்கப்படாத நிலையில் அம் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். வாழ்வாதாரங்கள் எதுவும் ஈட்ட இயலாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இம் மக்களது நிலைமைகளையும் ஜனாதிபதி அவர்கள் அவதானத்தில் கொண்டு, உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
R-06




