செய்திகள்

பட்டலந்த போன்று தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கும் நீதி வேண்டும் என்கிறார் சிறீதரன்!

பட்டலந்த வதை முகாமல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது போன்று தமிழ் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள் தொடர்பிலும் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் உரையில் ஒரு பகுதி வருமாறு,

பட்டலந்தவில் உங்களுடைய போராளிகளுக்கு நடந்தவற்றை மட்டும் விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு பக்கச்சார்பானதாக மாறும். உங்களை நாங்கள் ஜே.வி.பி போராளிகளாகவே பார்த்தோம். உங்களை பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை. ஜே.வி.பி போராளிகள் கிளர்ச்சியாளர்கள் என்று கூறினாலும் உங்களுக்காக இரக்கத்துடன் பேசியவர்கள் நாங்கள். களனி ஆற்றில் இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு மிதந்து வந்தபோது அவற்றை பார்த்து கவலையடைந்தவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். எவர் கொல்லப்பட்டாலும் அதற்கான விசாரணை வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

பட்டலந்தவில் இருந்த வதை முகாம் அதே இனத்தின் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆனால் எங்கள் மீது திட்டமிட்டு 80 வருடங்களாக மெல்ல மெல்ல எமது நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல இலட்சமான மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர். உணவு அனுப்பாமல், தடை செய்யப்பபட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இனப்படுகொலை செய்தனர்.

இதனால் தமிழ்த் தேசிய மக்கள் மீதான இனப்படுகொலை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியது. இதற்கான நீதி விசாரணை வேண்டும். பட்டலந்த என்ற சொல்லில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப்படுகொலையை மறைத்துவிட வேண்டாம் என்றார்.

-(3)