செய்திகள்

பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காஸாவுக்கு நீர், மின்சாரம் இல்லையென இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் இயக்கத்தினால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்கும் வரையில் காஸாவுக்கு நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என்று இஸ்ரேலின் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் இயக்கம் அங்கு இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடமொன்றில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி பலரை கொன்றதுடன், நூற்றுக் கணக்கானோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.

இவர்களில் 150 பேர் வரையிலானோர் காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவலல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை விடுவிக்க இஸ்ரேல் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் காஸாவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் இராணுவம் காஸாவுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை தடை செய்துள்ளது.

அங்கு ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையமே இருந்த நிலையில், எரிபொருள் இல்லாமையினால் அது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காஸா முழுமையாக இருளில் உள்ளதுடன், இலட்சக் கணக்கான மக்கள் மின்சாரம், எரிபொருள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீர், மின்சாரம், எரிபொருள் விநியோகம் வேண்டுமென்றால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஹமாஸுக்கு அறிவித்துள்ளது.

-(3)