செய்திகள்

பண்பாட்டுப் படுகொலை

சீர் உடையில் இராணுவம் தேர் இழுக்க
சீர்கெட்டுப் போனதுவோ எம் பண்பாடு?
ஆர் இருந்து நொந்து மென்ன
அவர்கள் இருந்தால் இது தகுமோ ? – இந்த

காரிருளைக் கண்டு களித்து
தோகை விரித்தன எம் வான்கோழிகள் !
போர்க் குருதி தோய்ந்த கரங்களை
புனிதப் படுத்துமா பொய்த் துதிகள் ?

மார்தட்டிச் சொன்னார்கள் சிலர்
இதை நல்லிணக்க சாட்சி என்று !
நீர் கட்டிப் பாயுதாடா……
விழியிரண்டும் மடை திறந்து !

ஊர்கூடி வடமிழுக்க இன்று நாதியற்றோம் !
உள்ளமெல்லாம் புண்ணாக நொந்து நின்றோம்
பார் தூற்றும் பகைவனின் செயல்கண்டு
பரிதவித்து பரிதவித்து வெம்புகின்றோம்!

ஓர் தாயின் பிள்ளைகள்தான்
இலங்கையில் நாமென்றால் -கண்டி *எசல
பெரகராவில் நாம் சென்று
ஊர்வலம் முன் கொடிபிடிப் போம் ?!!!

* எசல பெரகரா – ஆடி திருவிழா

கொற்றவை

1

குறிப்பு: வடக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரில் சில நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/07) அன்று யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு  வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் நிலங்களில் விவசாயம் செய்து அவற்றை அந்த மக்களுக்கே விற்பது, வியாபார நிலையங்களை அமைப்பது, உல்லாச விடுதிகளை அமைப்பது போன்ற செயற்பாடுகளில் இராணுவம் மும்முரமாக  ஈடுபட்டிருக்கிறது என்று அண்மையில் அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வு அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.