பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் கோதாவுடன் இருக்கின்றனர் : பொன்சேகா குற்றச்சாட்டு
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து துரத்திவிடப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் கோத்தாபயவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்கள் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைவாகவே தான் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், இதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், கோத்தாபயவின் எண்ணங்களை நிறைவேற்றச் சென்று சட்டத்தை மீறியவர்கள் தொடர்பில் தன்னால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியமையாலேயே நாடு என்ற அங்கீகாரம் எமக்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ளது. பாதுகாப்பு இன்றி நாடொன்றில் பொருளாதார முன்னேற்றமோ அல்லது நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கு உள்ளக ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் அச்சுறுத்தல் ஏற்படலாம். உள்ளக அச்சுறுத்தல் தொடர்பில் எமக்கு அனுபவங்கள் உள்ளன. இவற்றை தடுத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் உள்ளது.
புலனாய்வுப் பிரிவில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் இருந்தனர். எனினும், திறமைவாய்ந்த அதிகாரிகளை உரிய பதவிகளுக்கு நியமித்து அதனை மீளமைக்க முடிந்தது. மோசடிகள் தொடர்பில் துரத்திவிடப்பட்ட புலனாய்வு அதிகாரிகளே கோத்தாபயவுடன் இணைந்து மோசடிகளுடன் தொடர்புபட்டுள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




