செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் இரத்தாகும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, அதற்குப் பதிலாக  சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவான புதிய சட்டமூலமொன்று இன்னும் இரு மாதங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணாமல்போனோர் மற்றும் தமிழ்  அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மங்கள சமரவீர இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளில் நாம் தற்போது ஈடுபட்டுவருகிறோம். இரு மாதங்களில்  புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
இதற்கான நகல் வரைபு பணிகள் சட்ட ஆணைக்குழுவினால் நிறைவு செய்யப்பட்டு வரைபொன்று  அண்மையில் நீதியமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவான புதிய சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று அமைச்சர் சமரவீர இதன்போது  கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
காணாமல்போனோர் தொடர்பில் காணாத சான்றிதழ் வழங்குவதற்கான சட்டத் திருத்தங்கள் இன்னும் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இந்த விடயத்தைக் கூடிய விரைவில் பாராளுமன்றம் கொண்டுவருவதாக நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
காணாமல்போனோர் குடும்பங்களின் தேவைகள் தொடர்பிலான மதிப்பீடுகளையும் ஐ.சி.ஆர்.சி. நிறைவு செய்துள்ளது. இது தொடர்பில் நாம் மதிப்பீட்டு ஆய்வொன்றை நடத்தி நிறைவேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகங்களை அமைப்பதற்கான  நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. அதேபோல் பலவந்தமான அல்லது தனிச்சையற்ற காணாமல்போதல்களில் இருந்து அனைத்து நபர்களுக்குமான பாதுகாப்பு பற்றிய ஐ.நா. சாசனத்துக்கு அமைவான சட்ட ஏற்பாடுகள், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இம்மாத இறுதியளவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன் எமது தொழில்நுட்பக் குழுவொன்று தென்னாபிரிக்காவிலுள்ளது. தென்னாபிரிக்காவில் பல விடயங்ககளைக் கற்றுக்கொள்ள முடியும். அங்கு கற்றுக்கொள்ளும் விடயங்களை ஆராய்ந்து நாம் எமக்குரிய தீர்மானமொன்றுக்கு வர முடியும்.
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாக கூடிய விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
n10