பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபு பாதுகாப்பு விவகார குழுவுக்கு அனுப்பி வைப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்டம் தொடர்பான சட்ட வரைவு நேற்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற கண்கானிப்பு குழுவின் அவதானிப்புக்காக அனுப்பி வைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவித்த பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளதாவது,
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமானளவு சட்ட விதிகளை ஏற்படுத்தி இலங்கையில் முழுமையான மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் பூரணமாக நிறைவேற்றப்படுவதனை உறுதிப்படுத்துமுகமாக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பை வரைவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய கௌரவ அமைச்சரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில், அக்குழு தனது கலந்தாய்வுகளை பூர்த்தி செய்து, தயாரித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைபு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் மேலும் கலந்தாலோசிக்கவென தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் அவதானிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு குறித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைபை ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. என தெரிவித்துள்ளார். -(3)




