செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பல்வேறு துஸ்பிரயோக சம்பவங்கள்

வன்னயின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  பல்வேறு துஸ்பிரயோக சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான துஸ்பிரயோகச் சம்பவங்களால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. அதாவது அண்மைக்காலங்களாக பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்படும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறுகின்றது.

ஒரு சமுகத்தை கட்டியெழுப்புகின்ற சமுகமாக இருக்கின்ற ஆசிரியர் சமுகத்தின் ஒரு சில ஆசிரியர்களாலும் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றம் வரை இழுத்து வருகின்ற அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

அதாவது பாடசாலைகளில் குழு மோதல்கள் சண்டைகள் சச்சரவுகள் பாலியல் துஸ்பிரயோகங்கள் என பல்வேறு வடிவங்களில் குற்றங்கள் இடம்பெறுகின்றன.

இதனைவிட பதிவு செய்யப்படாத நிலையில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.

 அதாவது கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரை பாடசாலைச் சீருடையுடன் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவிணை காணவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோரால் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளை செய்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த தனியார் கல்விநிலைய நிர்வாகி மற்றும் ஆசிரியர்கள் சிலரும் குறித்த மாணவியின் வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதனைவிட தனியார் கல்வி நிலையங்களில் கால நேரங்கள் அற்றவகையில் வகுப்புக்களை நடத்துதல் கல்விச்சுற்றுலாக்கள் மேற்கொள்ளுதல் போன்ற சம்பவங்களும் இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன.

அதாவது அண்மையில் குறித்த  தனியார் கல்வி நிறுவனம் ஒன்று தனியார் கல்வி நிலைய மாணவர்களை கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற சமயம் பல இளைஞர்களையும் கூட்டிச்சென்றபோது அந்த இளைஞர்க்ள சிலர் மாணவிகளுடன் புகைப்படங்களை எடுத்து முகநூலின் ஏற்றியிருந்ததும் அதனால் மாணவிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மத்தியில் விசனத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அல்லது இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பல தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

வன்னிப்பகுதி பாடசாலைகளில் நிலவும் பெரும் ஆசிரிரியர் பற்றாக்குறையினால் மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களை நோக்கிச் செல்ல வேண்டிய தேவையுள்ளது.

சில தனியார் கல்விநிலையங்கள் முன்னுதாரணமான கல்வி நிலையங்களாக மாணவர்களின் எதிர்காலம் குறித்து பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றன.

அத்துடன் தாய் தந்தையரை இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் எதிர்காலம் குறித்து இலவசக்கற்றல் செயற்பாடுகளையும் அவர்களுக்கான ஒரு சில உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

வன்னிப்பகுதியில் இயங்கி வருகின்ற கூடுதலான தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்றியும் குடிநீர் வசதி மலசல கூட வசதிகள் இன்றியும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தனியார் கல்வி நிலயைங்கள் பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிய அதிகாரிகள் கண்காணிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.

பாடசாலைகளில் மாணவர்கள் மீதான துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகவும் பிரபல்யமான முன்னணிப் பாடசாலைகள் சிலவற்றில் ஆசிரியர்களால் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஒரு சில ஆசிரியர்கள் விடுகின்ற தவறு அல்லது இழைக்கின்ற குற்றம் பெரும் அளப்பரிய அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களை செய்கின்ற ஆசிரியர்களையும் பாதிக்கின்றது. அத்துன் இதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகின்றது.

இவ்;வாறான சம்பவங்கள் தற்போது பாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளனவா? அல்லது மாணவர்கள் பெற்றோர்கள் மீது விழிப்பணர்வு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது.

சிறுவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய தேவை என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் இருக்கவேண்டும்.

இன்றைய சிறுவர்கள் நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் சிலர் அக்கறை செலுத்தாது அவர்களை தவறான வழிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

கடந்த வாரம் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் சுமார் 26 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றினூடாக சீர் திருத்தப்பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று பாரதிபுரம் பகுதியில் 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் பலர் போதைப்பொருள் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டு சிறுவர் இல்லத்திலும் சான்று பெற்ற பாடசாலைகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட சட்டவிரோத மணல் அகழ்வுகள் மரக்கடத்தல்கள் என்பவற்றுக்கு தொழிலாளர்களாக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு அவர்களது எதிர்காலம் கருத்தில் கொள்ளப்படாது உழைப்புக்கள் குறைந்த வேதனத்துடன் உறிஞ்சப்படுகின்றன0.

வறிய குடும்பங்கள் அல்லது வருமானத்திற்கு குழந்தைகள் அவர்களது எதிர்காலம் குறித்து அக்கறை கொள்ளாது அவர்களது வாழ்க்கை மழுங்கடிக்கப்படுகின்றன.

இது ஒரு புறம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவர்களின் மீது அக்கறை செலுத்த வேண்டிய சமுகத்தில் உள்ள ஒரு சிலர் அவர்கள் மீது மேற்கொள்ளுகின்ற துஸ்பிரயோகங்கள் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

எனவே மாணவர்கள் சிறுவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் எல்லோரிடத்திலும் உள்ளது.

(பா.ஜதுர்சிகா)

N5