செய்திகள்

பாதாளக் கோஷ்டிகளின் வெறியாட்டம் நாளுக்கு நாள் தீவிரம்: தெற்கில் பெரும் பதற்றம்

தென்னிலங்கையில் பாதாளக் குழுக்களினதும், சட்டவிரோத ஆயுதக் குழுக்களினதும் அடாவடிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் மூன்று பயங்கர துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில்

இருவர் பலியாகியுள்ளதுடன், படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சினிமாப் பாணியில் தொடர்‌ச்சியாக அரங்கேறும் படுகொலைகளாலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களாலும் தென்னிலங்கை படுகொலை களமாக மாறிவருகிறதோ என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பொலிஸாரும் தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர், புளுமெண்டல் சம்பவத்துடன் தெற்கில் மீண்டும் தனது கைவரிசையைக் காட்ட பாதாளக்குழுக்கள் ஆரம்பித்தன என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக தென்மாகாணத்தில் கடந்துள்ள 70 நாட்களுக்குள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு இலக்காகி சிலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதாள குழுக்களின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த புதனன்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான தெமட்டகொட சமிந்த நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த பின்னர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்படும்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.

கார் மற்றும் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுதக்குழுவினரே சமிந்தவை இலக்குவைத்து சராமரியா சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இவர் முக்கிய பாதாளகுழு உறுப்பினராகக் கருதப்படுகின்றார். ‘குடு சமிந்த’ என்ற பெயரும் இவருக்கு இருக்கின்றது.

தெமட்டகொடை சமந்தா திரையரங்கிற்கு அருகில் வைத்தே கடந்த புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் சினிமாப் பாணியில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்தப் பதற்றம் தணிவதற்கு முன்னரே வெலிக்கடை – ஒபேசேகரபுர பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மற்றுமொரு பாதாளக் குழு உறுப்பினர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்த இரண்டு பேரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாத்தறை பகுதியைச் சேர்ந்த குப்புறுபிட்டிய ஹர்ஷ என அழைக்கப்படும் 32 வயதுடைய பாதாளக்குழு உறுப்பினரை இலக்குவைத்தே சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதுவும் பாதாளக் குழுக்களிடையே ஏற்பட்ட முறுகலால் இடம்பெற்ற உயிர்ப்பலியாகும்.

இந்நிலையில், நேற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து நலந்த சம்பிக்க (வயது – 41) என்ற நபர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளே இவர் மீது சூடு நடத்தி கொலைசெய்துள்ளனர்.

வணிகம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடைப் பொலிஸார் விசாரைணகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 n10