பாதுகாப்பு தரப்பினர் மீது காட்டும் அக்கறை பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீதும் காட்டப்படுமா…?
-நரேன்-
ஒன்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் நிலவிய கொடுங்கால் ஆட்சியையும், குடும்ப ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்து ஒரு ஜனநாயக சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை நாட்டின் சகல மக்களுக்கும் இருந்தது. யுத்த வெற்றியை தனது அரசியல் இருப்பிற்காக தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் என்று நம்பிய முன்னைநாள் ஜனாதிபதிக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவும் பெருமளவும் கிட்டியிருந்தது. ஆனால் யத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் மேற்சொன்ன காரணங்களுக்கு மஹிந்த அரசை மாற்ற முடிவெடுத்தனர். அதன்வெளிப்பாடாக அதே யுத்தத்தில் பாதுகாப்பு இணை அமைச்சராகவும், பின்னர் சுகாதார அமைச்சராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனாவை சர்வதேச சமூகமும் களத்தில் இறக்கியது. சரியான தருணத்தை எதிர்பார்த்து இருந்த மக்களும் இந்த தெரிவை ஏற்று மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கினர். தேர்தல் காலத்திலும் ஆட்சி கட்டிலில் ஏறியவுடனும் அவர் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது அவர் வெளியிடுகின்ற கருத்துக்களுக்கும் பாரிய இடைவெளியை அவதானிகக முடிகின்றது.
தேசிய இனப்பிரச்சனை என வருகின்ற போது பிரதமரும், ஜனாதிபதியும் ஒரே கருத்து நிலைப்பாட்டில் இருப்பதை அவதானிக்கக் கூடிய அதேவேளையில், வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்வுகளில் இருவருக்கும் இடையில் ஒரு பலமான கருத்து வேறுபாட்டை அவதானிக்கவும் முடிகிறது. இவைகள் எழக்கூடாது என்பதற்காகவே அமைச்சுப் பதவிகளில் இரண்டு கட்சிகளுக்கும் அனைத்து அமைச்சக்களிலும் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கெடுக்கும் வகையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஒரு கட்சியைச் சேர்ந்தவர் கபினட் அமைச்சராக உள்ளபோது மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர் இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். ஆக கட்சி அரசியல் தலைதூக்கிவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் இப்பொழுது கட்சி வேறுபாடுகளை தூக்கிப் பிடிப்பதாக உருவெடுத்துள்ளன.
இந்த நிலையை உற்று நோக்குகின்ற போது எவ்வாறு பாராளுமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஆட்சி அமைத்துக் கொண்டனரோ அதேபோன்றே உள்ளூராட்சி தேர்தல்களிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் தனித்தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் போது கூட்டாச்சியை அமைப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுதாகவே அவதானிக்க முடிகிறது. எது எப்படி இருப்பினும் மிகவும் பிரயத்தனப்பட்டு வெற்றிக்களிப்பில் மிதந்த மஹிந்தாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்து விடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் தந்துரோபாயத்துடன் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
2014 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து இருந்த வேளையில் வேட்பாளாராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அப்போதைய எதிர்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நாட்டில் இதுவரை காலமும் நீடித்து வருகின்ற தேசிய இனப்பிரச்சனைக்கு நீதியானதும், நியாமானதுமான தீர்வு காணப்படும் எனவும், காணாமல் போகச்செய்யப்பட்டோர் பிரச்சனை, தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சனை, மீள்குடியேற்றம், காணிவிடுவிப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் முன்னுள்ள ஏனைய பிரச்சனைகள் தொடர்பிலும் கரிசனை செலுத்தி விரைவில் தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார்கள். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றவுடன் அவசர அவசரமாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி ஒரு இடைக்கால மந்திரி சபையையும் அமைத்து தேர்தலின் போது கூறப்பட்டதிற்கிணங்க நூறு நாள் வேலைத்திட்டத்தையும் முன்வைத்தார். நூறு நாள் வேலைத்திட்டத்திலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததுடன், பொது தேர்தல் முடிவின் பின்னர் இவைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
அவர்கள் நினைத்தவாறே ஆட்சியும் அமைந்தது. அவர்கள் வெற்றிக்காக அரும்பாடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் போதும் அதன் பின்னரான புதிய நல்லாட்சியின் போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகனள் இன்னமும் கூட நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. அவ்வப்போது காணிகள் விடுவிக்கப்படுகின்றன. ஒருசில தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களது முழுமையான விடுதலை என்பது இன்னமும் கேள்விக் குறியாகவே உள்ளது. காணி விடுவிப்பு முழுமை பெறாமலே உள்ளது. காணாமல் போகச் செய்யப்பட்டோர் விடயத்தில் பொறுப்புக் கூறுவதற்கு இன்னமும் தயக்கம் காட்டப்படுகிறது. அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகளும், பொது மக்களும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திய போதிலும், தங்கள் மீதான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்யக் கோரியும் நடத்திய போராட்டங்கள் அவ்வப்போது தணிக்கப்பட்டனவேயன்றி முழுமையாக தீர்க்கப்படவில்லை.
இந்தப் பின்னனியில் இந்த நாட்டின் நல்லாட்சியை ஏற்படுத்தியதாக கூறும் ஜனாதிபதியினுடைய கூற்று கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட உடனனேயே மஹிந்தா தரப்பினர் தனிக்குழுவாக பாராளுமன்றத்தில் செயற்படத் தொடங்கினர். அவர்களை திருப்திப்படுத்தும் பொருட்டும், வெற்றிவாதத்திற்கு ஆதரவாக வாக்களித்த மக்களை திருப்திப்படுத்தும் பொருட்டும் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ சிப்பாயோ அல்லது இராணுவத்தினரோ, முன்னாள் ஆட்சி செய்த அரசியல்வாதிகளோ தண்டிக்கப்படமாட்டார்கள் என்று வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். ஆனால் போர்குற்றம், மனித உரிமை மீறல் என்பவற்றிற்கு பதிலாக கடத்தல்கள், கொலைகள், மற்றும் நிதி மோசடிகளின் கீழ் இராணுவத்தினரும், இராணுவ புலனாய்வு பிரிவினரும், கடற்படையினரும், கடற்படை புலனாய்வுப் பிரிவினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ‘சத்விரு உருமய’ என்னும் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தரப்பினருக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ‘ பாதுகாப்பு தரப்பினரையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் குறித்தும் தனது விசனத்தை வெளிப்படுத்தியள்ளார். அவர்களை 16 மாதங்களாக தடுத்து வைத்திருப்பது நியாயமில்லை என்றும் குற்றம் இடம்பெற்றிருப்பின் வழக்கு தாக்கல் செய்யுங்கள். இல்லையெனில் விடுதலை செய்யுங்கள். வழக்கை தொடர குற்றம் ஒன்று வெளிப்பட்டிருப்பின் அவர்களுக்கு பிணை வழங்கி வழக்கை தொடருங்கள். விடுதலை செய்தல், வழக்கு தாக்கல் செய்தல், பிணை வழங்குதல் போன்றன தர்மத்திற்கு உட்பட்ட விடயங்களே. அவை அடிபடை மனித உரிமைகளாகும். அவை நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரமாகும் எனத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் நேரடியாக கையளித்து காணாமல் போகச் செய்யப்பட்டோர், மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றுடன் பாதுகாப்பு தரப்புக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக தமிழ் மக்கள் சுட்டிகாட்டி வருகின்ற அதேவேளை, சில சம்பவங்களில் அவர்கள் நேரடியாக தொடர்புபட்டிருப்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் கரிசணையை வெளிப்படுத்தும் விதமாக தெரிவித்துள்ள கருத்துக்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது கோரிக்கை தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறுமா என்ற சந்தேகத்தையும், தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதன்காரணமாகவே தமிழ் மக்கள் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்தவராக தொடர்ந்தும் சர்வதேச விசாரணை மூலமே நீதியையும் நியாயத்தையும் பெற முடியும் என்பதை வலியுறுத்தியும் வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இதே விடயத்தை வலியுறுத்தியும், இதன் அடிப்படையிலும் ஏழாண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் சிவில் அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாட்டின் சட்ட ஆட்சி நிரூபிக்கப்படுமாக இருந்தால் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற சிந்தனை அடிமனத்திhல் இருந்து எழுவதாக இருந்தால் ஜனாதிபதியின் கூற்றுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமாக இருந்தால் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் ஜனாதிபதியின் கூற்றுக்கு அமைய நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அவை தொடர்பில் கண்டுகொள்ளப்படவில்லை.
பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக தாம் வெளிப்படையாக பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார். அத்தகைய ஒரு நிர்பந்தத்தை அல்லது அழுத்தத்தை தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் கொடுக்கவில்லை என்பது ஜனாதிபதியின் கூற்றில் இருந்து தெரிகிறது. உரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கருதஇடமுள்ளது.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பு தரப்பினர் மீது காட்டும் அக்கறையை ஒரு தேசிய இனத்தின் உரிமைக்குரலாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிப்பு செய்தவர்கள் மீதும் காட்டவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
N5




