பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: விசாரணை முடிவுக்கு வந்தது! செப்டம்பர் 8 இல் தீர்ப்பு!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை குறித்த தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழங்கு தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையிலேயே செப்டம்பர் 8 இல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் வைத்து பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டிருந்தார். கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த கொலை குறித்த தீர்ப்பு செப்டம்பரில் அறிவிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
இந்த கொலை தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதிக்கு முன்னதாக இரண்டு தரப்பினரும் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.




