பாவலன் மறைவு: கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பு முறைமைகளை மீளாய்வு செய்ய பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் வேண்டுகோள்
லண்டனில் கிரிக்கட் போட்டியொன்றில் விளையடிக்கொண்டிருந்தபோது மார்பில் பந்து பட்டு பாவலன் பத்மநாதன் என்ற ஈழத்தமிழ் இளைஞன் கடந்த ஞாயிறுக்கிழமை உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பில் தற்போதுள்ள முறைமைகள் மற்றும் விதி முறைகளை பரிசீலனை செய்யும் கலந்துரையாடல் ஒன்றை கிரிக்கட் சங்கங்களும் வல்லுனர்களும் ஆரம்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
பாவலன் பத்மநாதன் மரணமடைந்த சம்பவம் குறித்து அனுதாபமும் இரங்கலும் தெரிவித்து பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருப்பதுடன், இந்த சம்பவம் குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் எத்தகைய பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடிப்பது என்பது குறித்து ஆராய்வதற்கும் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாலவன் மாத்திரமன்றி அண்மையில் அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்து தலையில் தாக்கி பிலிப் ஹியூகஸ் என்ற துடுப்பாட்டக்காரர் உயிரிழந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம், இந்த சம்பவங்கள் கிரிக்கட் உலகத்தில் வீரர்களின் பாதுகாப்பு முறைமைகள் தொடர்பில் தீவிரமான ஒரு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே காட்டுவதாக தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவனான பாவலன் ஒரு சகலதுறை ஆட்டக்காரராவார். இவர் மானிப்பாய் பரீஷின் கழகத்துக்காக பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டித்தொடரில் விளையாடிவந்தார்.
இலங்கையின் வட மாகாணத்தை சேர்ந்த பாவலன், 5 வருடங்களுக்கு முன்னரே பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து வந்து மிகச் சிறந்த ஒரு கிரிக்கட் வீரராக மிளிர்ந்தார் என்றும் இலங்கையின் கொடிய யுத்தத்தில் உயிர் தப்பி பிரித்தானியாவுக்கு வந்த அவர் அவர் மிகவும் நேசித்த கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் போது மரணம் அடைய நேர்ந்தமை மிகவும் துரதிஸ்டமானது என்று பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாவலனின் மறைவு குறித்து அவரது தாயார் பத்மநாதன் பரமேஸ்வரி, சகோதரி பாரதி, சகோதரன் பானுகோபன் மற்றும் அவரது நண்பர்களுக்கு தனது அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் அவரது மறைவு தமது கழகத்துக்கு ஒரு பெரும் இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , பாவலன் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரித்தானியாவின் முக்கிய ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டிருப்பதுடன் பல கிரிக்கட் சங்கங்களும் தமது அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவில் கோடைக் காலதின் வார இறுதிநாட்களில் பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் நடத்திவரும் இந்த கிரிக்கெட் விளையாட்டுப்போட்டி மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. சுமார் நாற்பதுக்கும் அதிகமான விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வது வழமை.






