பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவில்லை: மகிந்த ராஜபக்ஷ
பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பில் தான் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலாநிதி ராஜ தர்மபால எழுதிய மஹாவீர வம்சய என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நாரஹேன்பிட்டியிலுள்ள அபேராம விகாரை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய பதில்களும்.
கேள்வி: உங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில்?
பதில்: நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பாக எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அத்தோடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினால் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது. இது அரசியலமைப்பிலேயே விதந்துரைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: – ஏ.எஸ்.பி யின் பீகொக் மாளிகையில் தங்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன உண்மையா?
பதில்: ஆம் உண்மைதான். பீகொக் மாளிகை அல்ல. பல்வேறு மாளிகைகளில் என்னை வந்து தங்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன.
கேள்வி-: உங்கள் தோல்விக்கு பஷில் ராஜபக் ஷ தான் காரணம் என விமல் வீரவன்ச தெரிவித்தமை தொடர்பில்?
பதில்: அது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். அது தொடர்பில் எதனையும் கூறமுடியாது.
கேள்வி: பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா?
பதில்: அது தொடர்பில் எதுவிதமான இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நான் தற்போது ஓய்வாக இருக்கின்றேன் என்றார்.




