பிரதி அவை தலைவர்: முதல்வர் இல்லாத நிலையில் தெரிவை மேற்கொள்ள ‘சி.வி.கே.’ முயற்சி
வெற்றிடமாகவுள்ள வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவரைத் தெரிவு செய்வதில் வடமாகாண சபையில் குழப்பமான நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனில் இருக்கும் நிலையில் தமக்குச் சார்பாக ஒருவரை இந்தப் பதவிக்கு நியமித்துவிட வேண்டும் என்பதில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசரம் காட்டுவதாக வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தான் அடுத்த வாரம் நாடு திரும்பிய பின்னர் இத் தெரிவை மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த போதிலும், இத்தெரிவை மேற்கொள்வது தமது உரிமை எனவும், இதற்காகத் தான் பொறுத்திருக்க வேண்டியதில்லை எனவும் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்திருக்கின்றார். நாளை மறுதினம் வியாழக்கிழமை அவை கூடும் போது இத் தெரிவை மேற்கொள்வதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
கட்சியின் தெரிவு என குறிப்பிட்ட ஒரு பெயர் அவரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இதனை ஏற்றுக்கொள்வதற்கு பல உறுப்பினர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ‘கட்சியின் தெரிவு’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர் சில வருடகாலமாக கொழும்பில் தங்கியிருந்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தவர் எனவும் தெரியவந்திருக்கின்றது.
இதனைவிட, வன்னிப் பகுதி உறுப்பினர்களாகவுள்ள மற்றும் இருவருடைய பெயர்களும் இந்தப் பதவிக்கு பிரஸ்தாபிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் முதலமைச்சர் லண்டனிலிருந்து திரும்புவதற்கு முன்னதாக தமக்குச் சார்பான ஒருவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ‘சி.வி.கே.குழு’வினர் அவசரம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.:06




