செய்திகள்

பிரதேசங்களின் சனத்தொகை, இன விகிதாசாரத்திற்கு அமையவே படையினரும் இருக்க வேண்டும்: டக்ளஸ் யோசனை

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சனத்தொகை மற்றும் இன விகிதாசாரம் ஆகியவற்றுக்கு அமையவே பொலிஸாரும், படையினரும் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவொன்றை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் நிமித்தம் முன்வைக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல்போனவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது பற்றிய உண்மைத்தன்மையும் கண்டறியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதங்களில் உரையாற்றிய போதே டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை முன்வைத்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணாமல்போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல் பற்றிய ஜக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான புத்திக பத்திரணவின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளதாவது:

“வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் பிரச்சினை என்பது தொடர்ந்தும் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினையாக இருக்கிறது. புத்திக பத்திரணவின் பிரேரணையை நான் வரவேற்கிறேன். இதே நேரம் காணாமல் போனவர்கள் எவ்வாறு காணாமல்போனார்கள் என்ற உண்மைத்தன்மையும் ஆராயப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஜ.தே.க.வின் திருகோணமலை மாவட்ட எம்.பியான அப்துல்லா மகரூப்பின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் பற்றிய தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா: இந்த பிரச்சினையானது திருகோணமலையில் மட்டுமன்றி யுத்தம் நடைபெற்ற  வடக்கு, கிழக்கு பகுதிகள் முழுவதிலும் காணப்படுகிறது. பொதுமக்களின் காணிகளிலுள்ள அதேபோல் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்ற வேண்டும்.

ஒரு காலகட்;டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை இருந்திருக்கலாம். ஆனால் அவை தற்போது தேவையில்லை. அந்த கருத்தை நான் வெளிப்படையாக முன்வைக்கிறேன். இதேநேரம் மாவட்ட ரீதியில் சனத்தொகை மற்றும்  இன விகிதாசாரம் ஆகியவற்றுக்கு அமையவே பொலிஸாரும் படையினரும் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் நிமித்தம் முன்வைக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

R-06