செய்திகள்

பிரபாகரன் குறித்து இந்திய புலனாய்வு வட்டாரங்கள் மத்தியில் காணப்பட்ட குழப்பம்

இந்திய புலனாய்வு வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பிரபாகரன் படுகொலை செய்யப்படவேண்டிய குறுகியகால ஆபத்தா அல்லது அவரை வளர்த்தெடுத்தால் நீண்ட கால நன்மை உண்டாகுமா  என்பது குறித்த குழப்பம் காணப்பட்டது என இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்து வெளியாகவுள்ள புதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்படுவதற்கு சற்றுமுன்னர் அவரைபேட்டி கண்ட நீனா கோபால்  எழுதியுள்ள புதியநூலிலேயே இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

ராஜீவ்காந்தியின் படுகொலை என்ற இந்த நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாக்குநீரிணைக்கு அப்பாலுள்ள இலங்கையின் வடக்குகிழக்கிலுள்ள அடர்ந்த காடுகளின் நடுவில் பிரபாகரன் ராஜீவ்காந்திக்கு எதிரான பகைமை உணர்வை வளர்த்தார். அந்த பகை பின்னர் பாரிய சீற்றமாக மாறியது.

இங்கேயேஇந்த காடுகளின் மத்தியிலேயே இந்திய பிரதமரை கொல்வதற்கான சதித்திட்டம்
முதலில் தீட்டப்பட்டது.

விடுதலைப்புலிகளின் தலைவர் காடுகளிற்குள் தனியாகவும் மறைமுகமாகவும் நடமாடிக்கொண்டிந்தார். தான் தங்கியிருக்கும் முகாம்களை இரவில் அவர் மாற்றிக்கொண்டிருந்தார். எனினும் ராஜீவ்காந்தி துரோகம் இழைத்துவிட்டார் என கருதிய அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மீது கடும் சீற்றம்கொண்டிருந்தார். ராஜீவ்காந்தி குறித்த அவரின் சீற்றம் வெளிப்படையானதாக காணப்பட்டது,  இந்தியர்களை தவிர அனைவரிற்கும் இது தெரிந்திருந்தது.

வடக்குகிழக்கில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்த நாட்களில் பிரபாகரன் அவர்களுடன் எலியும் பூனையும் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். தான் வெளியில் வந்தால், பாதுகாப்பற்ற விதத்தில் செயற்பட்டால் தனக்குள்ள ஆபத்தை உணர்ந்திருந்த அவர் ஓரு இடத்தில் இருநாட்கள் உறங்கியதில்லை, தொலைபேசி அழைப்புகளை  மேற்கொண்டதில்லை, எவரையும் நம்பியதில்லை, கொழும்பு மற்றும் டில்லியை விட ஓருபடி முன்னோக்கியே காணப்பட்டார், அவரது இறுதிநாட்கள் வரை இந்த குணம் அவரிடத்தில் காணப்பட்டது.

ipkf 1

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பவேண்டிய நிலை 1987இல் ஏற்பட்ட பின்னர் அவரது ஓரேயொரு பொழுதுபோக்கு  அவர் எங்கிருந்தோ பெற்றிருந்த திரைப்பட புரொஜெக்டரில் தங்கியிருந்தது. அவர் தான் தங்கியிருந்த மறைவிடத்தில் இரவில் தனக்கு பிடித்த திகில்படங்களை பார்த்தார்.

பிரபாகரன் இந்தியாவில் இருந்த காலத்தில் தனது ரோ நண்பர் சந்திரசேகரன் கொண்டு வந்துகொடுத்த ஆங்கில படவீடியோக்களிற்கு அடிமையாகியிருந்தார். பிரபாகரன் சந்திரசேகரனுடன் நெருக்கமான நட்பை பேணிணார்.

சந்திரசேகரன் சந்திரன் என அழைக்ப்பட்டவர், ரோவிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர் டில்லியை தளமாக கொண்ட தென்னாசிய ஆய்வு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி பணியாற்றி வருகின்றார்.

பிரபாகரன் பார்த்த படங்களில் இருந்து பெற்ற விடயங்களே ராஜீவ்காந்தியை கொல்வதற்கான சதிதிட்டங்களிற்கு பின்னணியாக காணப்பட்டன என சந்திரசேகர் கருதுகின்றார்.

1973 இல் வெளியான பிரெட்ஜினமெனின் தடே ஓவ்ஜக்கல் திரைப்படமே முதல் விதையை விதைத்திருக்கவேண்டும் என்கிறார் அவர்.

பிரபாகரன் பின்பற்றிய கொலைசெய்ய அல்லது கொல்லப்படு என்ற நிலைப்பாடே ராஜீவ்காந்தியை கொலைசெய்யும் திட்டத்திற்கு காரணம் என்கிறார் சந்திரசேகரன். பலர் சிஐஏ அல்லது மோசாட் பிரபாகரனின் மனதில் இந்த எண்ணத்தை தூண்டியிருக்கலாம் என கருதுகின்றனர். ஆனால் நான் பிரபாகரன் பார்த்த திரைப்படங்களே இதற்கு காரணம் என நான் கருதுகிறேன் என விடுதலைப்புலிகளின் தலைவரை நன்கு அறிந்தவரான சந்திரசேகரர் தெரிவிக்கின்றார். இவ்வாhறான பல சதிதிட்ட கதைகள் காணப்படுகின்றன

இதேவேளை புதுடில்லி பிரபாகரனை தனது கண்பார்வைக்குள் வைத்திருக்க வில்லை என தெரிவிக்கமுடியாது. பிரபாகரன் இந்தியாவிற்கு வருவதற்கு முயற்சித்தால் அவரை கைதுசெய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுடில்லி தயார்நிலையில் வைத்திருந்தது.

எனினும் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு வெளியே உள்ள வட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தரும் தகவல்களை வைத்துக்கொண்டு பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்பதை அறிவது கடினமாக காணப்பட்டது என்கிறார் ரோ அதிகாரியொருவர்.

பிரபாகரன் குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே அவர் அங்கிருக்கின்றார் என்ற தகவல் வரும் என்கிறார் ரோ அதிகாரியொருவர் சிரித்தபடி. புதுடில்லிக்கு விடுதலைப்புலிகளின் தலைவரை கொல்வதற்கான சந்தர்ப்பம் பலமுறைகிடைத்தபோதிலும் அது அதனை செய்யவில்லை.

அவ்வாறான ஓரு அனுபவத்தை இந்திய அமைதிப்படையை சேர்ந்த அதிகாரியொருவர் இவ்வாறு விபரிக்கின்றார்.  அவர் பலாலியிலும் , திருகோணமலையிலும் பணிபுரிந்தவர்.

‘‘ நாங்கள் எங்கள் ஹெலிக்கொப்டர்களுடன் தயாராகயிருந்தோம்,பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல் எங்களிற்கு கிடைத்துவிட்டது என்ற தகவலை நாங்கள் தலைமைப்பீடத்திற்கு அறிவித்திருந்தோம், எங்களுடைய நபர் ஓருவர் அவரை கண்டுபிடித்திருந்தார், நாங்கள் முழுமையாக தயார்நிலையிலிருந்தோம், புதுடில்லியிடமிருந்து தகவல்கிடைத்ததும் பிரபாகரனை நாங்கள் கொலைசெய்யலாம் என்ற நிலைகாணப்பட்டது, நாங்கள் உத்தரவிற்காக காத்திருந்தோம் எனினும் இறுதியில் வேண்டாம் என்ற உத்தரவே வந்தது.

இந்திய புலனாய்வு வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பிரபாகரன் படுகொலை செய்யப்படவேண்டிய குறுகியகால ஆபத்தா அல்லது அவரை வளர்த்தெடுத்தால் நீண்ட கால நன்மை உண்டாகுமா  என்பது குறித்த குழப்பம் காணப்பட்டது. மேலும் கொழும்பினை இந்தியா தனது பிடியில்வைத்திருப்பதற்காக பயன்படுத்த கூடிய நபராக பிரபாகரனை மாற்றமுடியுமா என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது.

ஆனால் புதுடில்லிக்கும் தனக்கும் இடையிலான உறவுகுறித்து பிரபாகரனிற்கு எந்த மாயையும் இருக்கவில்லை, ரோவின் சந்திரன் போன்ற பல இந்தியர்களிற்கு அவர் சலுகை வழங்கியிருக்கலாம் ஆனால் ராஜீவ்காந்தியை பொறுத்தவரை எதிரியாகவே அவர் கருதினார்.