செய்திகள்

பிரான்சில் தொடரும் வன்முறை!

பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த 4 நாட்களாக வன்முறைக் காடாக மாறியுள்ளது.

அங்கு வன்முறை மெல்லமெல்ல குறைந்துவரும் சூழலில் சிறுவனின் இறுதிச்சடங்குகள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளன. ஆனால், மற்ற இடங்களில் நீடிக்கும் வன்முறையில் கடைக்குள் புகுந்து வன்முறையாளர்கள் துப்பாக்கிகளை திருடிச் சென்றது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது நாளாக நீடிக்கும் வன்முறை தொடர்பாக இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெல் என்ற சிறுவன் அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்டவர். பிரான்சில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. அங்கும் வன்முறையை தூண்டுவதாக கொத்துக்கொத்தாக பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். தலைநகர் பிரஸ்ஸல்சில் மட்டும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்று பிரிட்டன் தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நான்காவது நாளில் வன்முறை சற்று குறைந்திருப்பதாகவும், 471 பேரை கைது செய்திருப்பதாகவும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மானின் கூறியுள்ளார். முதல் 3 நாள் வன்முறையில் 917 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மெர்செய்ல் நகரில் நேற்றிரவு துப்பாக்கி விற்பனையகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் துப்பாக்கிகளை திருடிச் சென்றுவிட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 இளைஞர்கள் துப்பாக்கி விற்பனையகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து 5 முதல் 8 வரையிலான துப்பாக்கிகளை திருடிச் சென்றுவிட்டதாக லி பாரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், வெடிமருந்துகள் ஏதும் திருடு போகவில்லை என்று பிரான்ஸ் 3 ஊடகம் கூறியுள்ளது.

ரோன் பிராந்தியத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் கூறியுள்ளன.

சுவருக்கு பின்னால் பதுங்கியிருந்த நபரை நெருங்கிய போது அவர்கள் மூவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக பிரெஞ்சு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-(3)