பிலிப்பைன்ஸின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்: வீதிகளில்,கால்வாய்களில் பிணங்கள்
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தில் இரண்டு மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 என்ற தகவல் கடந்த வாரம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரொட்ரிகொஸ் டாட்டடே பதவியேற்ற பின்னர் வீதிகளில் பிணங்களை காண்பது சகஜமாகி விட்டது என மனித உரிமை அமைப்புகளும்- மேற்குலக ஊடகங்களும் அலறுகின்றன.
போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் இனந்தெரியாதவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு அப்பாவிகளும் பலியாவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றது என்ற கருத்தும் பலப்பட்டு வருகின்றது.
மர்ம அழைப்பும் மரணமும்
யூலை மாதம் 25ம் திகதி 11 மணியளவில் ரெஸ்டியுட்டோ கஸ்டிரோவிற்கு மனிலாவின் வடக்கில் உள்ள கலுக்குன் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறி மக்ஆர்தர் நெடுஞ்சாலைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் தான் பிலிப்பைன்சின் புதிய ஜனாதிபதி தேசத்திற்கான தனது முதலாவது உரையை ஆற்றியிருந்தார்-இதன்போது அவர் நான் போதைப்பொருள் வர்த்தகர்களிற்கு எதிரான நடவடிக்கையை கைவிடமாட்டேன் என உறுதியளித்தார், இறுதிப்போதைப்பொருள் வியாபாரியும், பாவனையாளரும் சரணடையும் வரை, சிறைக்கம்பிகளிற்கு பின்னாள்செல்லும் வரை ஓயமாட்டேன் என்றார் அவர்.
மேலே குறிப்பிடப்பட்ட கஸ்டிரோ போதைப்பொருள் வியாபாரியில்லை, மிகவும் வறியவரான அவர் நண்பர்களில் சார்பில் போதைப்பொருளை கொள்வனவு செய்தார். எப்போதாவது பயன்படுத்தினார்.
நண்பர்கள் அவரை அந்த போதைப்பொருளை பயன்படுத்துமாறு வற்புறுத்துவது வழமை அவரால் அதனை மறுக்க முடியாமலிருந்தது என்கிறார் அவரது மனைவி. கஸ்டிரோ இந்த பழக்கத்தை நிறுத்துவதாகவும் உறுதியளித்திருந்தார் என அவர் தெரிவித்தார்.
கஸ்டிரோவிற்கு மர்ம அழைப்பு வந்து சிலநாட்களின் பின்னர் சிறிய துப்பாக்கி ரவை அவரது வாழ்வை முடித்துவைத்தது. இதன் மூலம் பிலிப்பைன்சின் புதிய ஜனாதிபதியாக ரொட்ரிகோ பதவியேற்ற பின்னர் ஆரம்பமாகியுள்ள போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தில் பலியாகியுள்ள 2000பேர்களில் ஓருவரானார் காஸ்டிரோ.
பிலிப்பைன்ஸ் பொலிஸின் பணிப்பாளர் நாயகம் கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுவரை 2000பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார், கடந்த ஏழு வாரங்களாக முன்னெடுக்கப்படும் விசேட பொலிஸ் நடவடிக்கையில் 700 பேர் கொல்லப்பட்டதை அவர் உறுதிசெய்தார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டு மாதங்களிற்குள் இத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளமை எவரிற்கும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை, ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னரே- தேர்தல் காலங்களிலேயே ரொட்ரிகோ போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களே உங்களை நான்கொலைசெய்வேன் என உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள், பாவனையாளர்களிற்கு எதிராக மக்களை போர் தொடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார், அவர்களை கொல்லுங்கள் என மக்களிற்கு உத்தரவிட்டார். ஆகவே அவரது உத்தரவின்பின்னர் இந்த கொலைகள் ஆரம்பமாகின.
வீதிகளில்,கால்வாய்களில் பிணங்கள்
மணிலாவின் தென்பகுதியில் அச்சத்துடன் காணப்படும் மக்கள் கூட்டத்தில் ஜெனி என்ற அந்த பெண்ணும் காணப்படுகின்றார். சில மணிநேரத்திற்கு முன்னரே அவரது வீட்டின் அருகில் துப்பாக்கிசத்தம் கேட்டது,அதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் ஜோன் போல் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.
இது உரிய நடைமுறையில்லாமல் மரணதண்டனை வழங்குவதை போன்றது, ஜனாதிபதி பொலிஸாரிற்கு முழு அதிகாரத்தையும் வழங்கிவிட்டார் என்கிறார் ஜெனி,போதைப்பொருள் வர்த்தகர்கள் எதிர்த்தால் அவரை கொல்லுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்,ஆனால் எதிர்க்காதவர்களை கூட கொல்கின்றனர் என்கிறார் ஜெனி.
பொலிஸார் தற்பாதுகாப்பிற்காகவே இந்த கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவிக்கின்றனர். அவர்களிற்கு நாட்டின் புதிய ஜனாதிபதியின் அசைக்க முடியாத ஆதரவு காணப்படுகின்றது.பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியொருவர் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது இதுவே முதற்தடவை என்கிறார் பொலிஸ் அதிகாரியொருவர்- ஜனாதிபதியின் முழுமையான ஆதரவால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும் இந்த மரணங்கள் மக்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது,வீதிகளிலும், கால்வாய்களிலும் இரத்தம் தோய்ந்த உடல்களை காண்பது வழமையாகிவிட்டது. கொலை செய்த பின்னர் தண்டனைகள் வழங்கப்பட்டதற்கான காரணங்களையும் உடலில் இணைத்து விட்டு செல்கின்றனர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது ?
பிலிப்பைன்சின் மழைக்காலத்தில் ஓரு நாள்- தலைநகர் மனிலாவிற்கு அருகில் உள்ள குயுசன் நகரில் தீடிரென பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
நள்ளிரவிற்கு பின்னரும் அவர்கள் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தனர், சிறிய உருவம், கண்களில் தீவிரமும் கொண்ட பெண்ணொருவர் மூத்தபொலிஸ் அதிகாரி குயிலர்மோ எலீசருடன் இணைந்து அருகிலுள்ள பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் புகைப்படங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார் – கடந்த ஆறு வாரகாலமாக அவர்கள் இரவில் அதனையே செய்துகொண்டிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் இருள்நிறைந்த குறுகிய பாதையொன்றின் ஊடாக பரங்கேலிபி குடிசைப்பகுதியை நோக்கி சென்றனர்,அவர்களுடன் சீருடைய அணிந்த அதிகாரிகளும்,10 ஹெல்மட் அணிந்த அதிரடிப்படை வீரர்களும் காணப்பட்டனர்.
டொகாங் நடவடிக்கை
அவர்கள் டொகாங் என்ற விசேடநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்,தற்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக உள்ள ரொட்ரிகோ டட்டர்டே சிலவருடங்களிற்கு முன்னர் இப்பகுதியின் மேயராக பணியாற்றியவேளை பின்பற்றிய நடவடிக்கையே இது.
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களின் வீடுகளின் கதவுகளை தட்டி பொலிஸ்நிலையத்திற்pகு விசாரணைக்கு அழைப்பது வழமை.
இந்தகுழுவினரும் அதனையே செய்தனர்,வீடொன்றின் கதவை தட்டிய எலீசர் வெளியே வந்த நபரிடம் நீங்கள் எங்கள் பட்டியலில் இருக்கின்றீர்கள் என தெரிவித்தார், பின்னர் அவரை பார்த்து நீர் எப்போது இறுதியாக போதைப்பொருளை பயன்படுத்தினீர் என கேள்வி எழுப்பினார்? காற்சட்டை அணிந்திருந்த அந்த நபர் நான் போதைப்பொருள் பாவித்து நீண்ட காலம் என தெரிவித்தார்.
இதற்கு அந்த பொலிஸ் அதிகாரி விசாரணைக்காக நீர் பொலிஸ்நிலையம் வரவேண்டும் என தெரிவித்தார்,அந்த நபரும் அதனை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் அந்த விசேட படை தனது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தது.






