செய்திகள்

பிளஸ்ரிக் , பொலித்தீனை தேசிய வைத்தியசாலைக்குள் கொண்டு செல்ல தடை

நோயாளர்களை பார்வையிட வருவோர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல், இளநீர், உணவுப் பொருட்களை பொதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகள் ஆகியவற்றை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர்விடுத்துள்ள அறிக்கையில் :
நோயாளர்களின் வசதிக்காக தேவையான குடிநீர் போதுமான அளவு அனைத்து வோர்டுகளுக்கும், பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ள நீரை வெளியிலிருந்து கொண்டு செல்லும் தேவை இல்லை என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலை நுழைவாசலுக்கு அருகாமையில் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிளாஸ்ரிக், பொலித்தீன், இளநீர் மற்றும் தேவையற்ற கடதாசி ஆகியவற்றை வைத்தியசாலைக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டாமென்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனைத்து வோர்டுகளிலும், பிரிவுகளிலும் வர்ணங்களுக்கு அமைய கழிவுகளை போடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட தொட்டிகளில் கழிவுகளை போடுமாறு பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் 5 ஆயிரம் கிலோ கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
நோயாளர்களின் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கழிவுகள் சுமார் 2 ஆயிரம் கிலோ நாளாந்தம் சேகரிக்கப்படுகின்றன. இதனால், கழிவுகளை அகற்றுவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். (3)