செய்திகள்

பிள்ளைகளே இந்தியாவில் இருந்து வராதீர்கள்… அகதி முகாமில் இருந்து நாடு திரும்பிய தாயின் ஆதங்கம்!

-கே.வாசு-

30 வருடமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தந்த வலிகளை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. அதன் வலிகள் இன்றும் எமது மக்களை விட்டுஅகலவில்லை. அதிலிருந்து மீளுவதற்காக நாளாந்தம் போராடும் நிலையே இன்றும் காணப்படுகின்றது. யுத்தம் காரணமாக பலர் தமது சொந்த இடங்களில் வாழ முடியாத நிலையில் வெளியேறியிருந்தனர். வெளியேறிய மக்களில் பலர் அகதி முகாம்களிலும், உறவினர்- நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைய, இன்னும் ஒரு பகுதியினர் அயல் நாடான இந்தியா சென்று அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் இதுவரை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 181 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள முகாம்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிப்பவர்கள் என 11 ஆயிரத்து 73 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்களாக உள்ளதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக இந்தியாவில் அகதி முகாம்களில் வசிக்கும் பலர் தற்போது அரசின் வாக்குறுதிகளை நம்பி மெல்ல மெல்ல நாடு திரும்புகின்றனர். அவர்களில் பலர் இன்னும் நாடு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐ.நா முகவரகம் ஊடாக ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 654 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் வவுனியா மாவட்டதில் 585 குடும்பங்கள் நாடு திரும்பிய நிலையில் வாழ்கின்ற போதும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், வீட்டுதிட்டம் என்பன எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அகதிகளாக சென்றவர்களை அழைத்து வருகின்ற போதும் அவை நிறைவேற்றப்படுகின்றனவா? அவர்களது தேவைகள் கவனிக்கப்படுகின்றனா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற நிலையில் நாடு திரும்பி வவுனியா மாவட்டத்தில் குடியிருக்கும் மக்களின் உள்ளக் குமுறல்களில் பதிவே இவை…

மாயதேவர் பசுபதிமாயதேவர் பசுபதி (வயது 55)

நாங்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு இந்தியா போய் அகதி முகாமில் இருந்தோம். அரசாங்கம் அகதிகளை திரும்பி வருமாறு அழைத்த நிலையில் எமது சொந்த மண்ணில் கடைசிக் காலத்தை போக்கவேண்டும். இறந்தாலும் எமது மண்ணிலேயே இறக்கணும் என்ற எதிர்பார்ப்போடு 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தாயகம் திரும்பினோம். எனக்கு செட்டிகுளத்தில் காணி இருந்தும் அது காடுபற்றி போய் இருக்கிறது. அதை வெட்டி துப்பரவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். மின்சாரம் வழங்கவில்லை. கேட்டால் காசு கட்டச் சொல்கிறார்கள். நாங்கள் இந்தியாவில் அகதியாகத் தானே இருந்தோம். நாம் பணத்துடன் வந்தால் இவற்றை கட்டி மின்சாரம், வீடு என எல்லாவற்றையும் பெற்றிருப்போம். காசு இல்லாத நிலையில் அரசின் வாக்குறுதிகளை நம்பினோம். ஆனால் இன்று நாங்கள் 2 பேர் எனக் கூறி வீட்டுதிட்டம் கூட தரவில்லை. இரண்டு பேர் என்றால் எமது மண்ணில் வாழத் தகுதியற்றவர்களா? என்னுடைய பிள்ளைகள் இந்தியாவில் தான் இருக்கின்றார்கள். எமக்கே இந்த நிலை என்பதால் பிள்ளைகளை வரவேண்டாம் என சொல்லி விட்டேன். இந்தக் காட்டில் வந்து வசித்து பார்த்தால் தான் இந்த அரசியல்வாதிகளுக்கு எமது நிலமை புரியும் என் கண்ணீர் விடுகின்றார்.

முத்தையா இராமநாதன்முத்தையா இராமநாதன் (வயது 66)

நாங்கள் 1990 ஆம் ஆண்டு இந்தியா போய் 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து நாடு திரும்பி துடரிக்குளத்தில் வசிக்கின்றோம். நானும், மனைவியும் நோய்வாய்ப்பட்டனாங்கள். இந்தியாவில் இருந்து வந்த போதும் நாம் இருவர் என கூறி எமக்கான வீட்டுதிட்டம் புறக்கணிப்பட்டிருக்கிறது. தண்ணீர் வசதி இல்லை. அரைக்கிலோமீற்றர் தூரத்திற்கு போய்த் தான் தண்ணீரை அள்ள முடியும். மழை காரணமாக எங்களது கொட்டில்கள் வெள்ளக்காடாகியதால் நாம் வசிக்க முடியாது என ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கீழ் வீடு கட்டித் தந்துள்ளார்கள். ஆனால் அதில் ஒருவர் படுத்தால் மற்றவர் திரும்பிக்கூட படுக்க முடியாதளவு சிறியதாக கட்டியுள்ளார்கள். வீட்டுதளபாடங்களை பொருட்களை கூட வைக்க முடியவில்லை. இதைவிட இந்தியாவில் முகாமில் வசதியாக இருந்தோம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கஜன் லக்சினிகஜன் லக்சினி

நாங்கள் 2008 ஆம் ஆண்டு இந்தியா போய் அகதி முகாமில் வாழ்ந்தோம். அங்கு தான் எனக்கு திருமணம் நடந்தது. 5வயது, 10 மாதக்குழந்தை என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். பிள்ளைகள் என்றாலும் சொந்த இடத்தில் அகதி என்ற பெயர் இல்லாது வாழ வேண்டும் என்ற ஆசையோடு புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் வார்த்தைகளை நம்பி 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி வவுனியா வந்து செமட்டிகுளம், துடரிக்குளத்தில் வசிக்கின்றேன். வரும் போது யூஎன்எச்ஆர் அமைப்பினால் 50,000 ஆயிரம் ரூபாய் பணம் தந்தார்கள். அதற்கு பிறகு இன்று வரை அரசாங்கத்தினது எந்த உதவியும் கிடைக்கவில்லை. காட்டை துப்பரவு செய்து தந்த பணத்தில் தற்காலிக கொட்டில் போட்டு இருக்கின்றோம். மின்சாரம் இல்லை. சின்னப் பிள்ளைகளுடன் காட்டுக்குள் இருந்து கஸ்ரப்படுகின்றேன். அடிக்கடி யானை வருகிறது. இரவில் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வெளியே நெருப்பு கொழுத்தி என்னுடைய கணவன் காவல் இருக்கிறார். இவர் சிவாரத்தி போல் முழித்து காவல் இருந்தால் தான் யானை பயம் இல்லாமல் நாம் நிம்மதியாக தூங்க முடியும். இந்தியாவில் இருந்து இந்த அரசை நம்பி வந்தோம். ஆனால் வீட்டுதிட்டம், மலசலகூடம், மின்சாரம், நிவாரணம் என எந்த உதவியும் இல்லாது தினமும் எமது வீட்டில் வாழ்க்கைப் போராட்டம் நடக்கிறது. இப்பொழுது இந்தியா திரும்பி போவோமா என்று கூட நினைக்கின்றேன் என்றார்.

கிருஸ்ணன் கோபாலுகிருஸ்ணன் கோபாலு

நாங்கள் 1990 ஆம் ஆண்டு இந்தியா போய் 2012 ஆம் ஆண்டு வந்தோம். வந்த பிறகும் இன்று வரை இரவல் வீட்டில் தான் வாழுறம். சொந்தக் காணி இருந்தும் அதற்குள் போக முடியாத நிலை. செட்டிகுளம், வாகை கட்டிய உலுக்குளம் பகுதியில் எனது காணி இருக்கிறது. அது காடாய் இருக்கு. மறுபுறம் அதற்குள் போகின்ற பாதையை ஊடறுத்து தற்போது புகையிரதப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் எமது கிராமத்திற்கான போக்குவரத்து பாதை இல்லை. மீள்குடியேறிய எல்லோருக்கும் வீட்டுத்திட்டம் எனக் கூறி அடிக்கடி பதிகிறார்கள். ஆனால் கடந்த நாலு வருமாக வீட்டைத் தான் காணோம். சொந்தக் காணி இருந்தும் அதற்குள் கூட போக முடியாத அவலநிலை தொடர்கிறது. வீடு கேட்டு கேட்டு நான் இறந்த பிறகு கூட இவங்கள் என்னுடைய குடும்பத்திற்கு வீடு தருவாங்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏன் இப்படி எல்லாம் எம்மை இந்த அரசாங்கம் ஏமாற்றுகிறது என்றார்.

தேவராஜா கஜன்தேவராஜா கஜன்

நான் இந்தியாவில் அகதியாக 8 வருடத்திற்கு மேல் இருந்து இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. வரும்போது ஐ.நா அகதிகள் அமைப்பால் செய்யப்பட்ட உதவியைத் தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. சின்னப்பிள்ளைகளுடன் நாங்கள் இருக்கின்றோம். நிவாரணத்தில் இருந்து வீட்டுத்திட்டம் என எந்த உதவியும் தரவில்லை. நாமும் எல்லா அரசியல்வாதிகளிடமும் கேட்டுவிட்டோம். ஆனால் கண்டு கொள்வதாக இல்லை. நாங்கள் இந்தியாவில் அகதி முகாமில் இருக்கின்ற போது கூட எந்த தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியா வந்தால் எம்மை வந்து பார்பதில்லை. ஆனால் இன்று இங்கு வந்து ஒரு வருடம் ஆகியும் அந்த நிலை தான் தொடகிறது. தேர்தல் காலங்களில் இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை தருவம் என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்களை கண்டு கொள்ளவே முடியுதில்லை. என்னால் சொல்லக் கூடியது ஒன்று தான். நாங்கள் இந்த அரசாங்கத்தையும், கூட்டமைப்பையும் நம்பி இங்கு வந்தோம். ஆனால் இன்று ஒரு நேர வயிற்றுப் பசியைப் போக்க போராடுகின்றோம். வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், மலசலகூடம், நிவாரணம் என எதுவும் இல்லை. இந்தியாவில் இருந்து இன்றும் பலர் நாடு திரும்ப ஆவலாக இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய நிலையை பார்த்து அவர்கள் வரவேண்டும். எம்மைப் போல் அவர்களும் வந்து கஸ்ரப்படக் கூடாது எனத் தெரிவித்தார்.

ஆனந்தராஜ் இந்துஆனந்தராஜ் இந்து

நாங்கள் இந்தியாவில் தான் பிறந்தோம். அங்கு தான் திருமணம் செய்து எனது ஒரு பிள்ளை அங்கு தான் பிறந்தது. அகதிகளை நாடு திரும்புமாறு இந்த அரசாங்கம் அறிவித்த பின்பு நாடு திரும்பி வந்துள்ளோம். தற்போது எனக்கும், பிள்ளைகளுக்கும் பிரஜாவுரிமையை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. பிரஜாவுரிமையை பெற 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்கிறார்கள். அதைத் தான் கஸ்ரப்பட்டு கட்டினால் கூட பிரஜாவுரிமை கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. பிரஜாவுரிமைபக்கு போகும் போது அப்பா, அம்மா, பாட்டன், பாட்டி வாழ்ந்த விபரங்கள், அவர்கள் இங்கு இருந்தமை தொடர்பில் பல தகவல்களை எம்மிடம் கேட்கிறார்கள். இந்தியாவில் பிறந்து வளர்ந்த எம்மிடம் அது பற்றிய விபரங்கள் இல்லை. அப்பா, அம்மா கூட 1990 க்கு முதல் இந்தியா சென்றுவிட்டார்கள். அப்படியான நிலையில் நாம் எப்படி பிரஜாவுரிமையை பெறுவது?. அதனால் வேலைவாய்ப்பு, அடையாள அட்டை, பிள்ளைகளின் கல்வி என தினமும் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றோம். அடையாள அட்டை இல்லாமையால் பொலிஸ் விசாரணைகள் கூட அடிடிக்கடி நடக்கிறது. அரசாங்கம் இந்த பிரஜாவுரிமையை பெறக் கூடிய இலகுவான ஒரு முறையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு, இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பி வாழ்கின்ற பலர் வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், மின்சாரம், மலசலகூடம், பிரஜாவுரிமை, கல்வி, யானைகளின் அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அகதிகளாக சென்றவர்களை நாடு திரும்புமாறு அரசாங்கத்தால் கோரப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நம்பி திரும்பிய மக்கள் இன்றும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். எனவே, இவர்களது பிரச்சனையை தீர்ப்பதன் மூலமே இந்தியாவில் உள்ள அகதிகளை முழுமையாக அழைத்து வர முடியும் என்பதே ஜதார்த்தனமானது.

N5