செய்திகள்

புகையிலை கம்பனிகள் வழங்கும் ஒரு சதத்தையேனும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை : ஜனாதிபதி

புகையிலை கம்பனிகள் வழங்கும் ஒரு சதத்தையேனும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செலவுகள் தொடர்பாக நேற்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பௌதீக ரீதியாக எவ்வளவு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பது நாட்டு மக்களின் சிறந்த சுகாதார நிலைகைளாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்களை ஆரோக்கியமான சமூகமாகக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் புகையிலை மற்றும் மதுசாரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பின்பற்றும் இறுக்கமான நடைமுறைகள் இன்று ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார தாபனம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
மேல் நாட்டு மருத்துவத்தைப் போன்றே எமது பாராம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் உட்பட சுதேச மருத்துவத் துறையும் இன்று உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துறையாக வளர்ச்சியடைந்திருப்பதுடன், இத்துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மருத்துவர்களும் தாதிமாரும் நாட்டை விட்டும் புலம்பெயர்வது இன்று சுகாதாரத் துறையில் பாரிய பிரச்சினையாகவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதை முடியுமானளவு குறைத்துக்கொள்ளுமாறு அனைத்து வைத்திய நிபுனர்களிடமும் தாதிமாரிடமும் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். தற்போது நாட்டை விட்டும் வெளியே வசிக்கும் அனைத்து மருத்துவர்களும் தாதிகமாரும் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து சிறிது காலமேனும் தாய்நாட்டுக்காக சேவைசெய்யவேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டை விட்டுச் சென்றுள்ள வைத்திய நிபுணர்களும் தாதிமாறும் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து தமது சேவையை வழங்க முன்வருவார்களானால் அவர்களுக்கான பொறுப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். -(3)