புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க மாவை வலியுறுத்து
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவியின் படுகொலை தொடர்பில் நியாயமான விசாரணைகளை பொலிஸார் உடன் முன்னெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவியான சிவலோகநாதன் வித்தியா நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற பின் வீடு திரும்பவில்லை.
அவரைத் தேடி அவரின் பெற்றோர்கள் அலைந்து திரிந்த போதும் மாணவி கிடைக்கவில்லை.இந் நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை புங்குடுதீவு 4 ஆம் வட்டாரம் கண்ணகியம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீட்டில் கோரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
அத்துடன் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பது மற்றொரு அதிர்ச்சியான செய்தி.மாணவியின் இந்தக் கோரக் கொலை தொடர்பில் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான ஜோன் அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு வல்லுறவுக் கொலையாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். எனக் கேட்டுள்ளேன்.
மேலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளேன் என்றுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-




