புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.
தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.
இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம் என கூறியுள்ளார்.
-(3)




