”புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு இப்போதைக்கு இல்லை”
அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளை இப்போதைக்கு ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டுவரும் பணிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானஙகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பு மறுசீரமைப்பு மக்கள் ஆணைக்கமைய நடக்கும். இப்போதைக்கு அந்த நடவடிகையை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டரை மாதங்களே ஆகியுள்ளன. எமக்கு பொருளாதாரமே எங்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. பொருளாதார ஸ்தீரப்படுத்துவதற்கே முழு அரசாங்கமும் செயற்படுகின்றது. அதற்கு சிலகாலம் எடுக்கும். அதனுடன் தொடர்புடைய தினசரி பிரச்சினைகள் உள்ளன. அவற்றை முகாமைத்துவம் செய்து வருகின்றோம். பொருளாதாரம் ஸ்தீர நிலைக்கு வந்த பின்னர் நாங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையை ஆரம்பிப்போம். அதனை இழுத்தடிக்காது குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையை தயாரித்து பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பை தயாரிக்கவே எதிர்பார்க்கின்றோம்.
எல்லாவற்றிலும் சிக்கிக்கொண்டு ஒன்றையும் செய்ய முடியாத நிலைக்கு போக தயாராக இல்லை. பொருளாதார பிரச்சினைகளுக்கே நாங்கள் முன்னுரிமை வழங்கி செயற்படுவோம் என்றார்.
-(3)




