செய்திகள்

புதிய உலக ஒழுங்கில் ஈழத் தமிழர்களின் சுய பொருளாதார மேம்பாடு

மருத்துவர்.சி.யமுனாநந்தா

தற்போதய சூழலில் பொருளாதாரக் குற்றங்கள் மனித உரிமை மீறல் குற்றங்களைவிட முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய உலக ஒழுங்கின் சீனாவின் மேலாதிக்கத்தினால் ஏற்பட்ட விளைவாகும். தற்போது உலகில் மனித உரிமையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உக்ரெயின் விளங்குகின்றது. ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள அவல நிலையைவிட உலக நாடுகளுக்குத் தத்தம் பொருளாதார மேனிலேயே முக்கியத்துவம் பெறுகின்றது.

உக்ரெயின் ரஸ்ய மோதலில் இந்திய அரசானது மேற்கு நாடுகளுக்குச் சாதகமாகச் செயற்படாத நிலைமையானது மேற்கு உலகினை ஆசியாக் கண்டத்தில் மட்டுமல்லாது ஆபிரிக்கா , தென் அமெரிக்காக் கண்டத்திலும் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையினை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தியாவினைச் சூழ பாகிஸ்தான், மியன்மார், சீனா, இலங்கை போன்ற நாடுகளின் வன்முறைச் சூழலும் இராணுவ மேலாதிக்கமும் தவிர்க்கப்பட்டுள்ளது.

.இந்தியாவினை முன்மாதிரியாக வைத்து யப்பான், அரபு நாடுகள், ஜேர்மனி, பிரான்ஸ் என்பனவும் ரஸ்யாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த வேண்டிய சூழலில் உள்ளன. உக்ரெயினுக்கு ஆயுதங்களை அளித்து யுத்தத்தை நீடித்தல் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய அமெரிக்காவினையும் பாரிய பொருளாதாரப் பின்னடைவிற்கு இட்டுச் செல்லுகின்றது. இத்தகைய சூழலில் புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார வளம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும்.

ஏற்கனவே அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட எமது இனம் மனித உரிமைகள் தொடர்பாகவும் நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார மந்த நிலையில் பொருளாதாரத் தடைகள் , ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஊழல்கள் என்பனவற்றிற்கு அப்பால் தமிழர்களின் அடையாளம் உறுதியாக அமைய தமிழகம் சார்ந்த பொருளாதார உறவுகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக சீனா , ரஸ்யா, இந்தியா, தென் ஆபிரிக்கா, பிறேசில் என்பன பொருளாதார ரீதியாக ஓத்துழைக்கும் போது இந்திய நாணயமே உறுதியானதாக அமையும். அரசியல், மனித உரிமைகளுக்கு அப்பால் அன்றாட இருப்பிற்கான ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தமிழர் சுய பொருளாதார மேம்பாட்டில் கரிசனை கொள்ளல் வேண்டும்.