செய்திகள்

புதிய சர்ச்சையில் ஹிலாரி – டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இடையே நடைபெற்ற நேரடி விவாதம் குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தன.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ. 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முக்கியக் கட்சிகளான குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றனர்.

இந்த இரு பிரதான கட்சிகளைத் தவிர லிபர்டேரியன் கட்சி, பசுமைக் கட்சி என்னும் இரு உதிரிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தலையொட்டி, முக்கியக் கட்சி வேட்பாளர்களிடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுவது அமெரிக்காவில் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் டிரம்ப், கிளிண்டன் இடையேயான விவாதம் கடந்த திங்கள்கிழமை (செப். 26)நியூ ஜெர்சி மாகாணம், ஹாஃப்ஸ்டிரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

அப்போது பயங்கரவாதம், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கும்போது அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவாதத்தின்போது, ஹிலாரி காதில் ரகசிய ஒலிக்கருவியைப் பொருத்திக் கொண்டு வெளியிலிருந்து தகவல்கள், அறிவுறுத்தல் பெற்று பேசினார் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். காதில் சிறு ஒலிபெருக்கியை ஹிலாரி மறைத்து வைத்திருந்ததாகவும், அவர் அணிந்திருந்த கோட் வழியே வயர், டிரான்ஸ்மிட்டர் போன்ற பொருள் தெரிந்ததாகவும் சமூக வலைதளங்களில் படத்துடன் விளக்கங்கள் வலம் வந்தன.

முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, தற்போதைய அதிபர் ஒபாமாவின் முதல் பதவிக் காலத்தின்போது வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தார். வழக்குரைஞருமான அவருடைய அனுபவத்தால் டிரம்ப்பை தவிடு பொடியாக்கிவிடுவார் என்று கூறப்பட்டது.

நிதானமிழந்து முன்கோபத்தில் கடுஞ்சொற்கள் பேசும் டிரம்ப் விவாதத்தில் தோல்வி அடைவது உறுதி என்று பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற விவாதத்தின்போது தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும் நடத்தாமல் விவாதப் பொருளைவிட்டு விலகாமல் டிரம்ப் பேசினார் என்று பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றார். அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட முடியும் என்பதை இது காட்டுவதாக பொதுமக்கள் கூறினர்.

விவாதம் முடிந்தவுடன் குறிப்பிட்ட 500 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 62 சதவீத ஆதரவுடன் ஹிலாரி விவாத்தில் வெற்றி பெற்றார் என்று சி.என்.என்.-ஓ.ஆர்.சி. தெரிவித்தது. எனினும் தேர்தலில் யாருக்கு வாக்கு என்ற முடிவில் மனம் மாறவில்லை என்று 50 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

அதன் பிறகு அடுத்தடுத்து பல்வேறு ஊடகங்கள் நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்புகளில், அந்த விவாதத்தில் டிரம்ப் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக புள்ளிவிவரங்கள் வந்தன. ஆனால் அந்தக் கருத்துக் கணிப்புகளை ஏற்க முடியாது என்று ஹிலாரி ஆதரவாளர்கள் கூறினர். கூகுள் இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஊடகங்கள் டிரம்ப்புக்கு எதிராக செயல்படுகின்றன என்று 64 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், மக்களிடையே தனக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக டிரம்ப் கூறினார். அவர் கூறியதாவது:

விவாதத்தின்போது நான் வரி செலுத்துவதில்லை என்று கூறியதாக ஹிலாரி கூறி வருகிறார். ஆனால் நான் அப்படிக் கூறவில்லை. நான் வரி செலுத்துவதில்லை என்று அவர் கூறியபோது, அப்படியானால் நான் கெட்டிக்காரன் என்று பதில் கூறினேன். அரசியல்வாதிகளுக்குப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரிவதில்லை. ஏதாவது செய்தால் அதற்கு உள்நோக்கம் இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்காக 6 லட்சம் கோடி டாலரை (சுமார் ரூ. 400 லட்சம் கோடி) அமெரிக்கா செலவழித்தது என்ற புள்ளிவிவரம் இப்போது வெளியாகியிருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு அமெரிக்காவை இரண்டு முறை புதிதாக உருவாக்கியிருக்கலாம். அத்தனை செலவு செய்தும் என்ன பயன்? பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும்போது, அந்தப் பணம் முற்றிலும் வீண் என்று இப்போது தெரிகிறது.

வெற்றி பெற்றால் அதைச் செய்வேன்-இதைச் செய்வேன் என்று ஹிலாரி கூறுகிறார். அவர் 26 ஆண்டு காலமாக ஆட்சிக்கு நெருக்கமாகவும் ஆட்சியிலும் இருந்து வருகிறார். ஏன் இதுவரை அவர் எதையுமே செய்யவில்லை? இப்போது மட்டும் செய்யப் போகிறாரா? கிடையவே கிடையாது. சுகாதாரம், குழந்தைகள் நலம் என்று எதுவானாலும் ஹிலாரி வெறும் பேச்சோடு சரி; ஆனால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றார் டிரம்ப்.

கருத்துக் கணிப்புகள்

நாட்டின் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் கண்காணித்து வரும் ரியல்கிளியர் பாலிடிக்ஸ் என்னும் அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தேசிய அளவில் டிரம்ப்பைவிட ஹிலாரிக்கு 1 சதவீதம் மட்டுமே கூடுதல் ஆதரவு உள்ளது. விதாதத்துக்குப் பிந்தைய பொது கருத்துக் கணிப்பிலும் இதே நிலை தொடர்கிறது. கடந்த மாதம் 8 சதவீதம் கூடுதல் வாக்குடன் முன்னிலையில் ஹிலாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் இவ்வளவு கடுமையான போட்டி நிலவுவது இதுவே முதல் முறை என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்தது.

உதிரிக் கட்சியான லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் 8 சதவீத ஆதரவும், பசுமைக் கட்சி வேட்பாளர் 3 சதவீத ஆதரவும் பெற்றிருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

டிரம்ப் – ஹிலாரி பங்கு கொள்ளும் இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி அக். 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்றாவது விவாதம் அக். 19-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி 

n10