புதிய தலைமை ஒன்றிக்கான சாத்தியங்கள் ?
யதீந்திரா
தமிழ்ச் சூழலில் அண்மைக்காலமாக மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் ஒரு சில சந்திப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், மாற்றுத் தலைமை என்னும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான் மாற்றுத் தலைமை என்னும் சொற்பிரயோகத்திற்கு பதிலாக ‘புதிய தலைமை’ என்னும் சொற்பிரயோகத்தையே இனிப் பயன்படுத்தவிருக்கிறேன். தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் மாற்றுத் தலைமை என்னும் சொற்பிரயோகம் சற்று சிக்கலான ஒன்றாகவே நோக்கப்பட்டு வந்திருக்கிறது. பொதுவாக மாற்று என்னும் சொல் இருக்கும் ஒன்றுக்கு எதிராக இன்னொன்றை முன்வைப்பதையே குறிக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய அரசியலை ஏகபோகமாக தீர்மானித்த காலத்தில், அதனை எதிர்த்து நின்ற தரப்புக்கள் அனைவருமே மாற்று தரப்பினர் என்னும் அடைமொழி கொண்டே நோக்கப்பட்டனர். இதனால் மாற்று என்னும் சொல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒன்றாகவே நோக்கப்பட்டது. மாற்று என்பதே ஒருவகை குழப்பல் வாதம் என்றவாறான பார்வையும் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. எனவே மாற்று என்பதற்கு பதிலாக புதிய தலைமை என்னும் சொற்பிரயோகமே அதிகம் பொருத்தபாடுடையது என்பது இப்பத்தியாளரின் கணிப்பு. புதிய தலைமை ஒன்றிற்கான தேடல்களில் ஈடுபடுவோர் இதனை கருத்தில் கொள்வது நல்லது.
இப்போது விடயத்திற்கு வருவோம். தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் காலத்திற்கு காலம் புதிய தலைமைகள் தோன்றியிருக்கின்றன. அவ்வாறு தோன்றிய தலைமைகள் அனைத்தும் குறிப்பிட்ட சூழ்நிலையை அடித்தளமாகக் கொண்டே தோற்றம் பெற்றிருக்கின்றன. அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அரசியல் அனுகுமுறைகள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்தே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கினார். இதன் பின்னர் தமிழ் மக்கள் வாக்குகளால் பிரிந்துநின்றனர். இந்த நிலையில்தான் 1972 இல் சிறிலங்காவிற்கான முதலாவது குடியரசு அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் உள்வாங்கப்படவில்லை என்னும் அடிப்படையில்தான் அடுத்த கட்ட அரசியல் பயணம் தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தப் புதிய சூழலை எதிர்கொள்வதற்கு புதிய அரசியல் உக்தியொன்று அவசியமென்று செல்வநாயகம் அவர்கள் கருதினார். தான் உருவாக்கிய தமிழரசு கட்சியையும் அதற்கான சின்னத்தையும் கைவிட்டு, புதிய ஒன்றைப் பற்றி சிந்திக்கலானார்.
அந்தச் சிந்தனையின் விளைவுதான் உதய சூரியன் சின்னத்தின் கீழான தமிழர் ஜக்கிய முன்னணி அதுவே பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியானது. எந்த தமிழ் காங்கிரஸை செல்வநாயகம் வெறுத்தாரோ அதனையும் உள்வாங்கியே புதிய தலைமைத்துவதத்தை ஸ்தாபித்தார். இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வி – தான் உருவாக்கிய தமிழரசு கட்சியை புறம்தள்ளும் முடிவை ஏன் செல்வநாயகம் எடுக்க நேர்ந்தது? ஏனெனில் புதிய சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் தன்னுடைய கட்சிக்கு இல்லையென்று அவர் கருதினார். எனவே புதிய சூழலை எதிர்கொள்ளுவதற்கு முற்றிலும் புதியதொரு அணுகுமுறை அவசியம் என்று அவர் கருதினார். அதனை மேற்கொள்ள வேண்டுமாயின் முதலில் அதற்கு ஒரு வலுவான அரசியல் ஸ்தாபனம் தேவை என்று அவர் கருதினார். ஏனெனில் அரசியல் ஸ்தாபனம் ஒன்றின்றி அரசியல் இல்லை.
இந்த பின்புலத்தில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் தமிழ் மிதவாதிகள் வீழ்சியடைந்ததும் ஆயுதம் தாங்கிய இளைஞர் இயக்கங்கள் தமிழ் அரசியலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக சகோதர மோதல்கள் இடம்பெற்றதும் அனைவரும் அறிந்ததே. இதன் பின்னரான முப்பது வருடங்கள் என்பது தமிழ் அரசியல் முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆளுகைக்குள் இருந்த காலமாகும். அதுவும் 2009உடன் முடிவுக்கு வந்தது.

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த எட்டு வருடங்களில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் எதிர்காலம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள்தான் இன்றுவரை இருக்கிறது. கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகள் ஏராளம். கட்சிகளுக்கு இடையில் பபரஸ்பர உடன்பாடுகள் இல்லை. தமிழரசு கட்சியின் மேலாதிக்கம், ஏனைய கட்சிகளை தமிழரசு கட்சி அவமானப்படுத்துகின்றது – இப்படியான பல குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் கூட, இப்போதும் அது கூட்டமைப்பாகவே இருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகள், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம், விக்கினேஸ்வரனின் எழுச்சி – இப்படி எவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரின் முக்கியத்துவத்தை இல்லாமலாக்கிவிடவில்லை. ஒற்றமையின் பெயராலோ, பாராளுமன்ற கதிரைகளின் பெயராலோ, பூனைக்கு மணி கட்டும் துனிவின்மையினாலோ, கூட்டமைப்பு அதன் குறைபாடுகளையும் மீறி நீடிக்கின்றது. அதன் குறைபாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவிட்டால் தங்களை நோக்கி மக்கள் வரக் கூடுமென்னும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கணக்கும் இன்றுவரை நிரூபிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. அதிருப்திகள் இருக்கின்றன என்பது உண்மைதான் ஆனால் அந்த அதிருப்திகளை ஒரு புதிய அரசியல் சக்தியாக திரட்டியெடுக்கும் வல்லமையுடன் எந்தவொரு அரசியல் ஸ்தாபனமும் வடக்கு கிழக்கில் இல்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் புதிய அரசியல் தலைமை அல்லது புதியதொரு அரசியல் கூட்டு தொடர்பிலான சிந்தனைகள் மேnழுந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இது தொடர்பில் விவாதிக்கும் போதெல்லாம் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயர் ஏதோவொரு வகையில் வந்துசென்றது. ஆனால் அதுவும் தற்போது சற்று பலவீனமடைந்திருக்கிறது. இப்போது தனிநபர்களை விட்டுவிட்டு, ஆகக் குறைந்தது ஒரு புதிய கூட்டுத் தலைமை ஒன்றிற்கான வாய்ப்புக்களாவது இருக்கின்றதா, என்று ஆராயப்படுகிறது. ஆனாலும் இப்பத்தியாளர் அறிந்தவரையில் இதில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அவ்வாறாயின் புதிய தலைமை ஒன்று சாத்தியமில்லையா என்னும் கேள்வி எழலாம். சாத்தியம் என்றும் செல்லலாம் அதே வேளை சாத்தியம் இல்லை என்றும் சொல்லலாம். அரசியல் ரீதியில் சம்பந்தன் மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவர் நம்பிக்கையுடன் பேசிய தேசிய அரசாங்கமோ நாளுக்கு நாள் அதன் தேசிய முகத்தை இழந்துவருகிறது. நம்பிக்கையுடன் இருங்கள், பொறுமையாக இருங்கள் என்று கூறிவந்த சம்பந்தன் தற்போது, தனது பேச்சின் போக்கையும் மாற்றத் தொடங்கியிருக்கிறார். அரசியல் யாப்பு தொடர்பான வழிகாட்டல் குழுவின் அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையில் எதுவும் இருக்கலாம் ஆனால் அது நடைமுறைக்கு வரப் போவதில்லை. இது சம்பந்தனும் அறியாத ஒன்றல்ல. இதற்கிடையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் யாப்பு தொடர்பில் தனியானதொரு அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசியல் யாப்பு தொடர்பிலான வழிகாட்டல் குழுவிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இருக்கிறது. அவ்வாறாயின் ஏன் தனியானதொரு அறிக்கை? இவ்வாறானதொரு சூழலில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டிலாவது தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தேர்தலின் போது எதைக் கூறி தமிழ் மக்களிடம் செல்வது? இந்தக் கேள்விக்கும் சம்பந்தன் பதிலை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டுதான் சம்பந்தன் இப்போதே தன்னுடைய பேச்சின் தன்மையை மாற்றிக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் மொத்தத்தில் சம்பந்தன் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமாக இருக்கிறார். ஆனால் அவர் இவ்வாறு பலவீனமாக இருக்கின்ற போது கூட அவரை வீழ்த்த ஏனைய கட்சியினரால் முடியவில்லை. ஆகக் குறைந்தது கூட்டமைப்புக்குள் கூட தமிழரசு கட்சியின் மேலாதிக்கத்திற்கு ஒரு கடிவாளத்தைப் போட முடியவில்லை. அவ்வாறாயின் சம்பந்தனை விடவும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் எந்தளவிற்கு பலவீனமாக இருக்கின்றனர் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறதல்லவா! அனைவருமே பலவீனமாக இருக்கின்ற மேடையொன்றில் ஒவ்வொருவரது பலவீனங்களும் மற்றவர்களது பலவீனத்தை பாதுகாக்கின்றது. புதிய தலைமை ஒன்றை நோக்கிப் போக முடியாமைக்கு இதுவே முதன்மையான காரணம். புதிய தலைமை சாத்தியம் ஆனால் அதனை சாத்தியப்படுத்த முடியாதளவிற்கு ஒவ்வொருவரது பலவீனங்களும் அவர்களை தடுத்து பின்நோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டென்னீஸ்வரன் விவகாரம் ஒரு முடிவுக்கு வரவில்லை. அவரை பதவி நீக்குமாறு அவரது கட்சி கோருகின்றது. அதற்கான அனுமதியையும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கியிருக்கிறது. முதலமைச்சரோ அவரிடமிருந்து இராஜினாமா கடிதத்தை பெற்றுத் தருமாறு கோருகின்றார். ஆனால் டென்னீஸ்வரனோ முடியாது என்கிறார். ஒரு தனிநபரால் எவ்வாறு அவரது கட்சியான டெலோவிற்கு எதிராக சவால் விடுக்க முடிகிறது? பழைய டெலோ என்றால் இதனை வேறு விதமாக கையாண்டிருக்கும் ஆனால் இந்தத் டொலோவால் அது முடியாது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் வேறு. அதாவது, டென்னீஸ்வரனால் இந்தளவிற்கு சவால் விடுக்க முடிகிறதென்றால் டென்னீஸ்வரனுக்கு பின்னால் ஒரு பலமான கை நிச்சயம் இருக்க வேண்டும். அதே வேளை டெலோ இல்லாவிட்டால் தமிழரசு கட்சி இருக்கிறது என்னும் துனிவும் இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், ஒரு தனிநபரால் இந்தளவிற்கு தனது கட்சியை எதிர்த்து நிற்க முடியாது.
கூட்டமைப்பிற்குள் இருக்கும் முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் எந்தளவிற்கு பலவீனமாக இருக்கின்றது என்பதற்கு டெலோவின் பிரச்சினை ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஒரு கட்சி தான் நினைக்கும் ஒரு விடயத்திற்காக, தன்னுடைய கட்சி உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. ஏனெனில் கூட்டமைப்பிற்கான சட்டபூர்வமான கட்சி அங்கீகாரம் தமிழரசு கட்சியிடம் இருக்கிறது. ஒரு உறுப்பினரை சட்டபூர்வமாக நீக்கும் அல்லது சேர்க்கும் எந்தவொரு உரிமையும் ஏனைய கட்சிகளிடம் இல்லை. தமிழரசு கட்சியின் செயலாளருக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. இதனை நன்கு விளங்கியே டென்னீஸ்வரன் சவால் விடுக்கின்றார். உண்மையில் கூட்டமைப்பில் தமிரசு கட்சியுடன் சட்டரீதியான உடன்பாடின்றி செயற்படுவதானது எந்த வகையிலும் ஏனைய கட்சிகளின் வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. மாறாக அனைவரும் சேர்ந்து தமிழரசு கட்சியை வளர்ப்பதற்கே பயன்படுவர். ஆவ்வாறுதான் இதுவரை செயற்பட்டுமிருக்கின்றனர். வேண்டுமானால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரங்களும் கிடைக்கலாம். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் இயக்கங்கள் தங்களை ஒரு கட்சியாக கருதினால் தங்களின் கட்சி மானத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவது அவசியம். கட்சி மானத்தை காப்பற்ற முடியாத இடத்தில் அந்தக் கட்சிகளில் இருப்பவர்களின் தன்மானமும் பறிபோய்விடும். கட்சி மானத்தையும் தங்களின் மானத்தையும் காப்பாற்ற முடியாமல் தடுமாறும் தலைவர்களால், எவ்வாறு தமிழ் மக்களின் தன்மானத்தை தூக்கி நிறுத்த முடியும்?




