செய்திகள்

”புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படவில்லை”

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது :
“புதிய பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டமைக்காக நீதி அமைச்சருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இதனை மக்கள் கருத்துக்காகத் திறந்துவிடுவதாக அவர் கூறியுள்ளார்.
எமது ஆலோசனைகளை அரசாங்கம் புத்திசாலித்தனமாகப் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தச் சட்டத்தில் நாம் காணும் பிரதான குறைபாடு என்னவென்றால், இதில் ‘பயங்கரவாதம்’ என்பது வரையறுக்கப்படவில்லை. பயங்கரவாதம் என்றால் என்ன என்று குறிப்பிடப்படாவிட்டால், பயங்கரவாதி யார் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் எவை என்பதில் பாரிய தெளிவற்ற நிலை ஏற்படும்.
எல்.டி.டி.இ (LTTE) பயங்கரவாதிகள் தமிழ் தாயகத்திற்காகவும், ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதிகள் இஸ்லாமிய தேசத்திற்காகவும் தாக்குதல் நடத்தினர். இவ்வாறான அரசியல் நோக்கத்திற்காக, போருடன் தொடர்பற்ற அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்வதுதான் பயங்கரவாதம் என அழைக்கப்பட வேண்டும்.
இது சரியாக வரையறுக்கப்படாத வரை, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அல்லது அழுத்தங்களை ‘மக்களை அச்சுறுத்தல்’ என வகைப்படுத்தி, மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தை மிக எளிதாகப் பறிக்க முடியும்.
அதேபோல், கொலை, சித்திரவதை, பணயக்கைதிகளாக வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் போன்றவை ஏற்கனவே எமது தண்டனைச் சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அங்கே உள்ளடக்கப்படாத விடயங்களையே நாம் இந்தச் சட்டத்தில் எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
இந்தச் சட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தம் கொடுப்பது குற்றம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.