செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் செயற்பாடு மிக விரைவில் நடைபெறும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டீ விக்ரமரத்ன தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, பொலிஸ்மா அதிபர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இந்தவிடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா  அதிபர் ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதியால் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சேவை நீடிப்புக் காலமும் நிறைவுக்கு வருவதால், புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் தீர்மானிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கிறார்.

வெகுவிரைவில் அடுத்து வரும் மணித்தியாலங்களில் அந்தப் பணிகள் இடம்பெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாளை அல்லது நாளை மறுதினம் இந்த விடயம் நடக்கும் என்று பிரதமர் கூறினாலும், அடுத்த வாரமும் அரசியலமைப்பு பேரவை கூடாது என்று தெரிவித்தார்.

அவ்வாறெனில் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இன்றியே இந்த அரசாங்கம் செயற்பட வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

-(3)