செய்திகள்

புற்றுநோய் வைத்தியசாலைக்காக நிதி திரட்டும் மஹேலவின் நடைபயணத்திற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு (வீடியோ)

காரப்பிட்டியவில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி திரட்டும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினரின் நடைபயணத்திற்கு வவுனியாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பருத்தித்துறையில் ஆரம்பித்த இந்த நடைபயணம் தெய்வேந்திர முனை நோக்கிச் செல்கின்றது. நடைபயணம் ஆரம்பித்து எட்டாவது தினமான இன்று காலை 10 மணிக்கு வவுனியா மத்திய மகாவித்தியாலய முன்றலை வந்தடைந்தது. இன்று காலை 5.00 மணியளவில் புளியங்குளத்தில் வடமாகாண சுகாதார அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எட்டாவது நாள் நடைபயணம் வவுனியா மத்திய மகாவித்தியாலயம் முன்றலில் முடிவடைந்தது.

இதன்போது இவ் நடைபயணத்திற்கு வவுனியாவில் அரசியல்வாதிகள், வர்த்தக சமூகத்தினர், பொது அமைப்புக்கள், பாடசாலை சமூகத்தினர், மாணவர்கள் எனப்பலரும் தமது ஆதரவுகளை வழங்கி அமோக வரவேற்பளித்து நிதிகளை வழங்கினர். ஓமந்தை மத்திய கல்லூரி, நொச்சிமோட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம், சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் கொடி அசைத்து வரவேற்றதுடன் பாண்ட் வாத்திய அணிவகுப்புகள் ஊடாக இந்த நடைபயணத்திற்கு உற்சாகமளித்தனர். வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள், மாவட்ட செயலகம் உத்தியோகத்தர்கள், பொலிசார், வங்கி உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தினர் எனப் பலரும் இந்த நடைபயணத்தில் இணைந்து கொண்டு தமது பங்களிப்புக்காக நிதிகளை வழங்கினர்.

இந்த நடை பயணத்தில் மஹேல ஜெயவர்த்தன மற்றும் அவரது மனைவி, வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, செ.மயூரன் உள்ளிட்ட பலரும் இன, மத, பேதங்களைக் கடந்து கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்த நடை பயணம் நாளை (14.10) காலை 5.30 இற்கு வவுனியாவில் ஆரம்பமாகி மதவாச்சி நோக்கி செல்லவுள்ளது.

IMG_0111 IMG_0106

IMG_0085 IMG_0094 IMG_0097 IMG_0099 IMG_0102

N5