செய்திகள்
புலிகளிடம் கைப்பற்றப்பட்ட 150 கிலோ தங்கத்தில் 40 கிலோ தங்கம் எங்கே?
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 150 கிலோ கிராம் தங்கத்தில் 30 கிலோ மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன் 80 கிலோ இராணுவத்திடம் உள்ளதென்றால் மிகுதி 40 கிலோ தங்கம் எங்கேயென ஜே.வி.பி. தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரத்தின் போது ஜே.வி.பி.எம்.பி. நளிந்த ஜயதிஸ்ஸ, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் எத்தனை கிலோ? அதில் எத்தனை கிலோ உரிமையாளர்களான தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது? தேர்தல் காலத்தில் சில தமிழ் மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவை எத்தனை கிலோ? எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதர் ரணில் விக்கிரமசிங்க, இறுதிக்கட்ட யுத்தத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 150 கிலோ கிராம். இதில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் 30 கிலோ தங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 80 கிலோ தங்கம் இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது என்றார்.
இதன்போதே, கைப்பற்றப்பட்ட தங்கம் 150 கிலோ, தமிழ் மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்ட தங்கம் 30 கிலோ. இராணுவத்தின் பாதுகாப்பிலுள்ள தங்கம் 80 கிலோ. 150 கிலோ தங்கத்தில் 110 கிலோ தங்கத்துக்குத்தான் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அப்படியானால் மிகுதி 40 கிலோ தங்கம் எங்கே?, அதற்கு என்ன நடந்ததென அநுரகுமார திசாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இத்தங்கம் வடக்கு மாகாண தமிழ் மக்களுடையது. இது வடக்கில் கிடைத்த புதையல் அல்ல. யுத்தம் முடிந்து 6 வருடங்களாகிவிட்ட நிலையிலும் இத் தங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாதது அநீதி. உரியவர்களை கண்டுபிடித்து அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில் ; ஆம். தங்கத்தின் அளவுகளில் முரண்பாடுகள் உள்ளன. நான் இன்று (நேற்று) காலையில் தான் இத் தகவல்களை பெற்றுக்கொண்டேன். குறைவடையும் தங்கம் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.
n10




