புவி வெப்பமடைதலால் ஏற்படும் சூழலியல் அனர்த்த அவலம்.
மருத்துவர் சி. யமுனாநந்தா
அண்டாட்டிக் கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் உருகலானது உலகின் சமுத்திரச் சாகியத்தில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஆழ்சமுத்திர நீரோட்டமான உலகின் சூழல் நேயத்திற்கு இயற்கையான கொடையாகும். சாதாரணமாக அண்டாட்டிக்கா பகுதியில் குளிரான உப்பு நீரானது கடலுக்கு அடியில் 4000அடி ஆழத்திற்கு கீழாகத் தினமும் அதன் அதிக அடர்த்தி காரணமாகச் செல்கின்றது. இவ்வாறு ஆழ்சமுத்திரத்திற்குள் கடல்மேல் மட்டத்திலிருந்து செல்லும் கடல் நீரானது அடர்த்தி கூடியதாகவும், ஒட்சிசன் செறிவு கூடியதாகவும் ஆழ்கடலில் உள்ள உயிரினங்களுக்குத் தேவையான போசாக்கு நிறைந்ததாகவும் வெப்பசக்தி உடையதாகவும் உள்ளது. இதுவே இயற்கையின் நியதி. இவ்வாறான ஆழ்கடல் நீரானது ஆழ்கடல் நீரோட்டத்தின் மூலம் பூமியின் சகல சமுத்திரங்களிலும் சுற்றிச் செல்கின்றது. இவை பூகோளச் சமுத்திரத்தில் வெப்பம், ஒட்சிசன், போசணைப் பொருள்களை சீராக விரகிச் செல்ல உதவுகின்றன.
வடக்கு நோக்கிச் செல்லும் சமுத்திர ஆழிநீரோட்டங்கள் இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் என்பனவற்றிற்கான கடல் சாகியத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அதாவது கடலில் வாழும் உயிரினங்களினது போசாக்கு, வெப்பம், ஒட்சிசன் என்பவற்றை வழங்குகின்றன. இதே போன்ற செயன்முறைகளே வடஅரைக்கோளத்தில் கிறீன்லாந்துப் பகுதியிலும் நடைபெறுகின்றது. ஒரு தாயின் கருப்பைக் கோளத்தில் இருந்து சிசுவிற்கு எவ்வாறு போசாக்கு, ஒட்சிசன், வெப்பம் என்பன கிடைக்கின்றனவோ அவ்வாறே தான் புவிமாதாவின் கோளத்தில் சமுத்திர ஆழி நீரோட்டம் அதன் புதல்வர்களைக் காப்பாற்றி வளர்க்கின்றது.
துரதிஸ்டவசமான அண்டாட்டிக்காக் கண்டத்தின் சில இடங்களில் ஏற்படும் மாற்றங்கள் உலகின் சகல சமுத்திர சாகியத்தையும் பாதிக்கும், மேலும் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றத்திலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. தாயின் உதரத்தில் உள்ள சிசுவிற்கு எவ்வாறு போசாக்கு வழங்கல், ஒட்சிசன் வழங்கல், வெப்பநிலை வழங்கல் பாதிக்கப்பட்டு அச்சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றதோ அல்லது அச்சிசு அழிகின்றதோ அவ்வாறே புவிமாதாவின் பூகோள கோளத்தில் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் அங்குள்ள சகல உயிர்களையும் பாதிக்கின்றது. இதில் மனிதர்களும் அடங்குவர்.

அண்மைக்காலங்களில் புவி வெப்பமடைதல் மிகவும் வேகமாக நிகழுகின்றது. பசுமைநேயச் செயற்பாடுகள் ஆர்வமற்று அருகிச் செல்கின்றது. இதன் தாக்கத்தினால் அண்டாட்டிக் கண்டத்தில் பனிப்பாறைகள் மிகவும் வேகமாக உருகுகின்றன. இவ்வாறு மிகவும் அதிகரித்த பனிப்பாறைகளின் உருகலானது அடர்த்தி குறைந்த, உப்புச்செறிவு குறைந்த, ஒட்சிசன் குறைந்த, போசாக்கு குறைந்த கடல்நீரின் ஆழ்கடலுக்கு மெதுவாக செல்கிறது அதாவது அடர்த்தி குறைந்த கடல்நீர் கடலின் ஆழத்திற்குச் செல்லும் வேகம் அடர்த்தி கூடிய கடல்நீர்; கடலின் ஆழத்திற்குச் செல்லும் வேகத்திலும் குறைவானது. பனிப்பாறைகளின் உருகும் வீதம் அதிகரிக்க, இயற்கையாகக் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போசாக்கு நிறைந்த, ஒட்சிசன் நிறைந்த, வெப்பமிக்க கடல்நீரின் அளவு குறைக்கப்பட்டு இதனால் சமுத்திரஆழி பூகோள நீரோட்டம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. அதிகரிக்கும் பச்சைவீட்டுக்காழல்கள், அதிகரித்த கைத்தொழில் கழிவுகள், பூகோள வெப்பமாதலை அதிகரித்து, சமுத்திர ஆழியின் இயற்கையான பூகோள நீரோட்டத்தைப் பாதிக்கின்றன. சமுத்திர ஆழிகளே பூகோளத்தில் நிகழும் காபன் வெளியேற்றலைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால் தற்போது நிகழும் கட்டுப்பாடற்ற கைத்தொழிற் செயற்பாடுகள் இதே வேகத்தில் தொடர்ந்தும் நிகழ்ந்தால் அடுத்த 30 வருடங்களில் அண்டாட்டிக்கா கண்டத்தில் நிகழும் சமுத்திர ஆழி நீரோட்டம் 40மூ தினால் குறைவடையும் என விஞ்ஞானிகள் தற்போது எதிர்வு கூறி உள்ளனர். இவ்வாராய்ச்சிகள் உலகளாவியரீதியில் நிகழக்கூடிய பாரிய சூழலியல் அனர்த்தத்தினை கட்டியம் கூறி உள்ளன. அதாவது அண்;டாட்டிக்காக் கண்டத்தின் இயற்கையான சமுத்திர ஆழிச்சுற்றோட்டம் பாதிக்கப்படுவதனால் அதாவது காலநிலை மாற்ற வெப்பநிலை அதிகரிப்பு, ஆர்முடுகுவதலால் பனிக்கட்டிகள் உருகும் வேகமும் ஆர்முடுகி இயற்கையான சமுத்திர நீரோட்டம் அமர்முடுகலைச் சந்திக்கின்றது.
அதாவது தென்துருவ ஆழ்கடல் நீரோட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் உலகளாவியரீதியில் காலநிலை மாற்றத்தில் மென்மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். பருவ மழைவீழ்ச்சியில் மாற்றங்கள் ஏற்படும். சூறாவளி, புயல் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படும். சோலை வனங்கள் பாலைவனங்களாக மாறும். பாலைவனங்கள் சோலை வனங்களாக மாறும். விவசாயத்தில் எதிர்பாராத வறட்சி, அழிவு, வெள்ளப்பெருக்கு அழிவு ஏற்படும். உலகில் பட்டினிவீதம் மென்மேலும் அதிகரிக்கும். தொற்றுநோய்களின் எண்ணிக்கையும், தொற்றாநோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடையும்.
தென்துருவ பனிக்கட்டி உருகும் வேகம் ஆர்முடுகலில் உள்ளபோது ஆழ்கடல் நீரோட்டம் குறைக்கப்பட்டு சமுத்திர மேல்மட்ட நீரோட்டம் அதிகரிக்கும். கடல்மட்டம் அதிகரிக்கும். கடல்வாழ் உயிரினச் சாகித்தியத்தின் பல்வகைத்தன்மை பாதிக்கப்படும்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் இடஅமைவு அரேபியக்கல், வங்காள விரிகுடா, பாக்குநீரிணை என்பவற்றின் கடல் நீரோட்டங்களில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இவை காலநிலை மாற்றங்களை அதிகரிப்பதுடன் இப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தினையும் பாதிக்கும்.
தற்போதைய சூழல்நேயமற்ற பூகோள வெப்பமடைதலை அதிகரிக்கும். செயற்பாடுகள் அவ்வாறே தொடருமாக இருப்பின் சமுத்திர ஆய்வு விஞ்ஞானிகளின் எதிர்வு கூறல்களின்படி 2050ம் ஆண்டளவில் ஆழ்கடலில் 4000அடி ஆழத்தில் நிகழும் சமுத்திர நீரோட்டம் நின்று விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு. இதனால் ஆழ்கடல்வாழ் உயிரினங்களுக்கு அத்தியாவசியமான போசாக்குகள், ஒட்சிசன், வெப்பம் என்பன இயற்கையாக வழங்கல் நின்றுபோகும் அபாயம் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த சமுத்திர சாகித்தியத்தின் இயற்கை அழிக்கப்படும். இது கடலின் மேற்பரப்பிற்கும் படிப்படியாகப் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் கடல்நீர்மட்ட அதிகரிப்பு, பூகோள வாழ்விடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். நிலக்கீழ் நீர் உவர்நீர் ஆதல், சுத்தமான குடிநீருக்கு பற்றாக்குறை என்பன அதிகரிக்கும்.
பூகோள வெப்பமாதல் அதிகரிப்பு, தென்துருவ பனிக்கட்டிகள் உருகும் வீதம் அதிகரிப்பினை ஏற்படுத்துகின்றது. பனிக்கட்டியினைச் சூழ அதிகரித்த உருகிய வெப்பமான நீர் உள்ளபோது மென்மேலும் பனிக்கட்டிகள் உருகுகின்றன. பூகோள வெப்பமாதலையும், உலக காலநிலை மாற்றத்தையும் சமுத்திர ஆழி நீரோட்டம் குறைக்கின்றது. பூமியில் காலநிலை மாற்றத்தைத் தாங்க அதிக அளவு காபனையும், அதிக அளவு வெப்பத்தையும் ஆழ்சமுத்திரமே ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் பூகோள ஆழி நீரோட்டம் குறைவடைதல், பூகோள வெப்பமாதல் அதிகரித்தல் உருகிய பனிக்கட்டி நீரால் மேலும் அதிக அளவில் பனிக்கட்டிகள் உருகல் என்பன உலகின் சூழலியல் சமநிலையினை காலத்துடன் அதிகரிக்கும் ஆர்முடுகலில் பாதிக்கின்றது. எனவே இது தொடர்பாக மானிட சமுதாயம் முதன்மை விழிப்புக் கொள்வதற்கான காலம் இதுவாகும்.
உலகில் சூழல் வெப்பமடைதலை இயற்கையாக சமுத்திரங்களே தாங்கிக் கொள்கின்றன. அண்மைக்காலத்தில் பச்சைவாயு விளைவாக ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பில் 90மூ இனை சமுத்திரங்களே தாங்கிக் கொண்டன. இவ்வெப்பம் சாகரத்தின் மேற்பரப்பிலேயே அதிகமாக உள்ளது. ஆனால் இவை படிப்படியாக கீழ்மட்ட கடல் சாகித்தியத்தையும் பாதிக்கும். சமுத்திரங்கள் மனிதனின் நடவடிக்கைகளால் நிகழும். காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தில் 40மூ இனைத் தன்னகத்தே ஏற்றுக் கொள்கின்றது.
சமுத்திர ஆழ் ஆழி நீரோட்டமானது அண்டாட்டிக்காக்கண்டத்தில் இருந்து தென் அமெரிக்காவரை செல்லுகின்றது. அடுத்தது அவுஸ்திரேலியாவரை செல்லுகின்றது. அடுத்தது ஆபிரிக்கா ஊடாக ஐரோப்பாவரை செல்லுகின்றது. வட அரைக்கோளத்தில் கிறீன்லாந்தில் இருந்து தென் அமெரிக்காவரை ஒரு நீரோட்டம் உள்ளது. அவ்வாறே இந்து சமுத்திரத்திலும் பசுபிக் சமுத்திரத்திலும் ஆழ் சமுத்திர நீரோட்டங்கள் உள்ளன. பூகோள வெப்பமாதலால் அதிகரிக்கும் ஒவ்வொரு 0.1 பாகை செல்சியஸ் வெப்பநிலையை குறைப்பதால் காலநிலை மாற்றத்தினால் நிகழக்கூடிய பாரிய பாதிப்புக்களைக் குறைக்கலாம். காலநிலை மாற்றம் ஆழ்கடல் சமுத்திர சாகித்தியத்தை நாம் இதுகாறும் எதிர்பாராத வகையில் வெகுவாகப் பாதிக்கின்றது. பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தினைக் குறைக்க கடுமையான சட்டக்கட்டுப்பாடும், தீர்மானங்களும், செயற்பாடுகளும், அது தொடர்பான சமூகமயப்படுத்தலும் விரைவாகச் செயற்படுத்தப்படல் வேண்டும். இதனாலேயே எமது பூமாதேவியின் உதரத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் காப்பாற்ற உதவும்.


