செய்திகள்

பூகோளமயமாதலும் தமிழரின் நவகாலனித்துவமும்

சிவா செல்லையா
முன்னைய காலங்களில் காலனித்துவ மேலாண்மை என்பது மரபுவழி அரசுகளின் படைவலிமையினால் உருவாக்கப்பட்டது. ஆனால் நவகாலனித்துவம் என்பது தொழில்நுட்ப மேம்பாட்டாலும், பொருளாதார மேம்பாட்டாலும் தனித்தோ அன்றிப் படைவலிமையினாலோ ஏற்படுவது ஆகும்.

போர்த்துக்கேய காலனித்துவம், ஒல்லாந்தர் காலனித்துவம், பிரித்தானியரின் காலனித்துவம் என்பவற்றிற்குப் பின் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க பிரித்தானிய கூட்டு மேலாதிக்கம் உருவாகியது. இக்கூட்டு ஏனைய நாடுகளில் பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டது. ஆனால் தொழில்நுட்பத்தில் பன்மைத்துவ வளர்ச்சி குறிப்பாக உலகில் சீனாவினைப் பொருளாதார காலனித்துவத்தை முதன்மைப்படுத்த ஏதுவாகியது. காலனித்துவம் என்றால் ஒரு நாடு தனது செல்வாக்கை பொருளாதாரரீதியில், ஆள்புலரீதியில் ஏனையநாடுகளில் செலுத்தும் கனதியில் தங்கி உள்ளது.

ஒரு நாட்டில் அல்லது உலகின் எந்தவொரு பாகத்திலும் மரபுசார் அரசுக்கு அப்பால் இயங்கக்கூடிய சமூக பொருண்மியக் கட்டமைப்பாக நவகாலனித்துவம் அமையும். உலகில் விரவிக் காணப்படும் ஓர் இனக்குழுமம் அதன் அடையாளங்களைத் தக்கவைத்து முன்னேறும்போது, பூகோளமய-மாக்கலுடன் இயைந்த நவகாலனித்துவத்தை உருவாக்க முடியும்.

மரபுசார் அரசுகளுக்கு அப்பால் தமிழர்கள் நவகாலனித்துவத்தினை ஏற்படுத்தும் சூழல் ஈழத்தமிழரின் புலம்பெயர்வு வாழ்வு ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில் தமிழர் நலன்சார் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட வேண்டிய முக்கிய துறைகளாவன :

1. பொருண்மிய மேம்பாடு, அதாவது பொருளாதார முதலீடு சர்வதேச மட்டத்தில் அமைக்கப்படல் வேண்டும். குறிப்பாகக் கனடாவிலும், அவுஸ்ரேலியாவிலும் தமிழரின் காத்திரமான பொருளாதார முதலீடு, தமிழரின் நவகாலனித்துவத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

2. புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் அந்நாடுகளின் சட்டங்களினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழரின் நவகாலனித்துவ ஆதிக்கத்திற்கு சர்வதேச சட்ட ஆலோசனை அமையம் அமைதல் நன்று.

3. தமிழரின் கலாசார மேம்பாடு நவகாலனித்துவ ஆதிக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இவற்றில் முக்கியமானது தமிழர்களால் அமைக்கப்படும் இந்து ஆலயங்களும், கலாசார நிகழ்வுகளும் ஆகும். இது தமிழர்களின் கலாசாரம் காலமாற்றத்துடனும் முன்னேற வழிவகுக்கும்.

4. சர்வதேச ரீதியில் தமிழர்கள் கல்வியில் முன்னேறல் நவகாலனித்து-வத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள கல்விக் கட்டமைப்பிலும் தமிழ் மாணவர்கள் உணர்வுக்கூர்மை உடையவர்களாகவும் (emotional intelligence) மீத்திறமை உடையவர்களாக மாறல் வேண்டும்.

5. சர்வதேச தமிழ் தொழில்நுட்ப மேலாண்மை வாரியம் அமைக்கப்படல் வேண்டும். இதில் தகவல் தொழில்நுட்பம், நனோ தொழில்நுட்பம், உயிர்மூலக்கூற்றுத் தொழில்நுட்பம் மிகவும் இன்றியமையாதவை ஆகின்றன.

6. சர்வதேசரீதியில் தமிழர்கள் வர்த்தக மேம்பாடு அடைதல் வேண்டும். விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து என்பனவற்றில் முதலீடுகள் செய்யப்படல் வேண்டும்.

7. சர்வதேசரீதியில் இராஜதந்திர அந்தஸ்து உள்ள தமிழர் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். இதனை இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களின் சர்வதேச இராஜதந்திரக் கற்கைகள்மூலம் உருவாக்கலாம்.

தமிழர்களின் நவகாலனித்துவத்திற்கான நியாயத்துவங்களாக அமைபவை :
1. தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பு.

2. இந்திய மேலாதிக்கமும், சிங்கள மேலாதிக்கமும் தமிழரின் இருப்பை இல்லாது செய்து விடலாம்.

3. நாகரீக மேம்பாட்டிலும், தொழில்நுட்ப மேம்பாட்டிலும், புலம்பெயர் வாழ்விலும் தமிழரின் இருப்பைத் தக்கவைக்க நவகாலனித்துவவாத நியாயாதிக்கம் இன்றியமையாதது.

4. ஆங்கிலேயரின் காலனித்துவத்தில் தமிழர்கள் அடிமைகளாகக் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். அண்மைய சிங்கள மேலாண்மையில் தமிழர்கள் படகுகளில் அகதிகளாக ஏற்றப்பட்டனர். எனவே தமிழர்கள் உலகில் தமிழ்மொழி ஒலிக்க, ஒளிர நவகாலனித்துவத்தினை ஏற்படுத்த வேண்டும்.

மொழி ஒலி மொழி ஒழியா ஒளி!