செய்திகள்

பூந்தோட்ட மக்களை குடியேற்ற மக்களின் காணியை அபகரிக்க முயற்சி: பிரதேச செயலகத்திற்கு எதிராக திரண்ட மக்கள்

வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களை குடியேற்றுவதற்காக மக்களுக்கு சொந்தமான காணியை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அக் காணிகளை துப்பரவு செய்ய விடாது, பிரதேச செயலகத்திற்கு எதிராக மக்கள் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.

வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களை வீடு கட்டி குடியேற்றுவதற்கான வேலைகள் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் லைக்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அம் மக்களுக்கான 70 வீடுகளை அமைக்கும் பணி தற்போது இடம்பெற்று வரும் நிலையில் மிகுதி 80 வீடுகளையும் அமைப்பதற்காக சின்னடம்பன், செங்;கல்படை குளத்தின் கீழான விவசாய காணிகளை வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வழங்கியிருந்தது.

குறித்த காணிகள் 1963 ஆம் ஆண்டு முதல் சின்னடம்பன் மக்களால் விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த வேளை காணிப்பத்திரங்களும் அவர்களிடம் உள்ளது. 1983 ஆம் ஆண்டு செங்கல் படை குளம் உடைப்பெடுத்தைத் தொடர்ந்தும் யுத்தம் காரணமாக குறித்த விவசாய காணிகள் பயிர்செய்கை செய்யப்படாத நிலையில் இருந்தது. தற்போது அக் குளத்தை திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அம் மக்களின் விவசாய காணிகளை பூந்தோட்டம் மக்களை குடியேற்ற பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த காணியை லைக்கா நிறுவனம் துப்பரவு செய்ய முற்பட்ட நிலையில் மக்கள் தமது காணிப் பத்திரங்களுடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி துப்பரவில் ஈடுபட்டவர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, அப்பகுதி கிராம அலுவலர் பிரதீபா ஆகியோர் பிரச்சனையை சமரசம் செய்து வைத்ததுடன் காணி துப்பரவு வேலைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தினர். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், இது தொடர்பில் விரைவாக அரச அதிபருடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.

DSC00567 DSC00594

N5