செய்திகள்
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் உள்ளுராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டமூலத்தை வரவேற்கின்றேன்
உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்களில் பெண்களுக்கு நான்கில் ஒரு பகுதி இட ஒதுக்கீடு என்ற முன்னுரி வழங்கப்பட வேண்டும். என்ற தீர்மானத்தை வரவேற்கின்றேன். அதேவேளை உள்ளுராட்சி சபைகளில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத் தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தலிலும் பெண்களுக்கு அவ்வாறான முன்னுரிமை கொடுக்கப்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே செயலாளர் நாயகம் அவர்கள் இவ்வாறு கூறினார். மேலும் அச்சட்டமூலம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் உரிய காலத்தில் விரைவாக நடத்தப்பட வேண்டும். மக்களின் பிரச்சனைகளை மக்கள் பிரதிநிதிகளாலையே இலகுவாகப் புரிந்து கொண்டு தீர்வுகளைக் காண முடியும்.
தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு விஷேட ஆணையாளர்களின் கீழ் உள்ளுராட்சி சபைகள் இயங்குகின்றபோது, மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகள் மக்களுடன் பணியாற்றுவதற்கும், அந்த மக்களே தமக்கு சேவை செய்யக் கூடியவரை தெரிவு செய்து அவர்களிடம் உரிமையோடு தமது தேவைகளை நிவர்த்திக்க முற்படுவதிலும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. என்றும் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் அவர்கள், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு நான்கில் ஒரு பகுதி (25 விகிதம்) இட ஒதுக்கீடு என்ற முன்னுரி வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வரவேற்கின்றேன்.
அதேவேளை உள்ளுராட்சி சபைகளில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத் தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தலிலும் பெண்களுக்கு அவ்வாறான முன்னுரிமை கொடுக்கப்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்படுத்த முனையும் புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலும் வழியுறுத்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனது முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும்.
நீண்ட கால யுத்தப் பாதிப்புக்களுக்குப் பின்னர் எமது அயராத முயற்சியினால் வட மாகாணத்தில் உள்ளுராட்சிக் கட்டமைப்புகள் மீண்டும் உயிர் பெற்றன. எனவே அவற்றின் குறைபாடுகளை திருத்திக் கொண்டு அவற்றை மக்களுக்கு பயனுள்ள நிர்வாக மையங்களாக வளர்த்தெடுக்க வேண்டும். எனவே வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்குள்ளும், ஆதிக்கத்திற்குள்ளும் வட மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்ற நிலையில், ஆகவே வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளையும், அவற்றில் காணப்படும் செயற் திறனற்ற குறைபாடுகளையும் கவனத்தில் கொண்டு அவற்றை நிவர்த்திக்கும் பொறுப்பை வடக்கு மாகாண சபை நிறைவேற்ற வேண்டும்.
வடக்கிலுள்ள உள்ளுராட்சி நிர்வாகங்களை ஏனைய மாகாணங்களிலிருந்து முன்னோக்கி செயற்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபை கூடுதல் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அப்போதுதான், உள்ளுராட்சி நிர்வாகங்களை மக்களுக்கு பயனுள்ளதாகவும், அதன் மீது மக்கள் கொண்டிருப்பதற்கும் ஏற்றவகையிலும் அவற்றைப் பாதுகாத்து முன்னோக்கி செயற்படுத்துவதற்கு முடியுமாக இருக்கும். என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இறுதியாக இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால் மொழிக் கொள்கை அமுலாக்கமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாத குறைபாடுகளையே எங்கும் காண்கின்றோம்.
இந்த உள்ளுராட்சி தேர்தல் முறை தொடர்பான திருத்தச் சட்டமூலத்தில் சரத்துக்களை தெளிவு படுத்தியிருக்கும் பாராளுமன்றக் கோவையில், ஓரிடத்தில், இவ்வாறு அதாவது ‘ இவ்விடத்தில் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுமிடத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழும் சிங்களமும் சமமான அரச மொழிகள் என்று சட்ட ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள போதும், தேசிய கீதத்தை தமிழிலும் பாடப்படுவதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலும் இதுபோன்ற ஆவண மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தமிழ் மொழிக்கான உரிய இடத்தை வழங்காமலிருப்பது ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் வேதனையளிக்கும் விடயமாகும்.
அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டிருப்பதாகவே, தமிழிலும் தேசிய கீதம் சுதந்திர தினத்தில் பாடப்பட்டதை தமிழ் பேசும் மக்கள் கருதினார்கள். அந்த மகிழ்ச்சியை இவ்வாறான விடயங்கள் நிரந்தரமற்றதாக்கி விடுமோ என்ற கவலையே மேலோங்கி நிற்கின்றது.
எதிர் காலத்தில் இந்த குறைபாட்டை நிவர்த்திக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இச்சபையில் கோரிக்கை விடுக்கின்றேன். அதற்கான ஆரம்பத்தை நாட்டின் உயர்ந்த சபையான இந்த பாராளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
n10




